உண்மையில் என்ன தான் நடக்கிறது தமிழ் நாட்டில்??

ஏன் தொடர்ந்து பொது நுழைவுத் தேர்வு என்றாலே ஜீரம் வந்து விடுகிறது நமது அரசியல் வாதிகளுக்கு என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். மேலோட்டமாக பார்க்கும் போது, நமது அரசு, பள்ளி மாணவர்களை காப்பதைப் போலத்தான் தோன்றும். ஆனால் உண்மையில் தமிழக கல்வித்துறையின் மிகப் பெரிய தோல்வியை மறைக்கவே இந்த மறுப்பு என்பது புரியும். நமது இளைய சமுதாயத்தினரை திறன் இன்றி வளர்த்து ஏமாற்றும் ஒரு சதிச் செயல் என்று கூட சொல்லலாம்.

பள்ளி கல்வி

பியுசி முறை மாற்றப்பட்டு, 10 +2 முறை கொண்டுவரப்பட்டது. ஆங்கில வழி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளும் பெருகின. கல்லூரிகளில் சேருவதற்கு 3 வித பள்ளிகளிலும் இருந்து மாணவர்கள் போட்டியிட்டனர்.

அரசு பள்ளிகள்

தனியார் பள்ளிகள் வந்து விட்ட போதும், அரசு பள்ளிகள் தங்கள் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவில்லை. இன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். வாயை கட்டி, வயிற்றை கட்டி, கடனை வாங்கி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியே தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள்.

ஆங்கிலம்

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏன் இன்றைய நவீன விஞ்ஞான சூழலில் கூட ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை என்பது தான் முக்கிய கேள்வி. சரி தமிழாவது முறையாக பயில்கிறார்களா என்றால் அது ஒரு தனிக் கதை.

தேர்வுகள்

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை தேர்வுகளே இல்லாமல் எல்லா மாணவர்களும் பாஸ்!! 10ம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் 90% குறையாமல் மிகவும் கவனமாக தான் ‘சரி’ செய்யப்படுகிறது. 11ம் வகுப்பு பாடங்களை அறவே தவிர்த்து, 12ம் வகுப்பு தேர்விலும் 90% தாண்டிய பாஸ் தான்!! எவ்வளவு ஆச்சர்யம்…

உண்மையில் நடந்த ஒரு தீடிர் சோதனையில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட 2 எண்களை தாண்டி பெருக்கல் தெரியவில்லை. உயிர்மெய் எழுத்துக்கள் தெரியவில்லை. இது தான் வேதனையான உண்மை.

சமச்சீர் கல்வி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஏன் அரசு, தரமான கல்வி திட்டத்தை முன் வைப்பதில்லை. சமச்சீர் கல்வி என்ற பெயரில் கல்வியின் தரத்தை தாழ்த்துவதால், ஏழை மாணவர்களால் எப்படி வாழ்வில் முன்னேற முடியும். தமிழக அரசு, கல்வியின் தரம், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல் ஆசிரியர்களை மேம்படுத்துதல் என நேர்வழியில் செல்லாது, குறுக்கு வழியில், தரத்தினால் மதிப்பீடு செய்யும் பொதுத் தேர்வினை தடைசெய்து வருகிறது. இது தான் உண்மை. இதனால் எப்படி நம் மாணவச் செல்வங்கள் போட்டிகள் நிறைந்த உலகில் முன்னேறுவார்கள். பெருமிதம் கொள்வார்கள்.

எதுவரை

இப்படி தரம் இல்லாத பள்ளிக் கல்வியை முடித்து சரி செய்யப்பட்ட மதிப்பெண்களால் இன்று லட்சக்கணக்கான பட்டதாரிகள், பொறியாளர்கள் வேலை இல்லாமல் அல்லாடுகின்றனர் என்பது தானே உண்மை நிலை.

தொழில் திறன்

கல்வி என்பது எப்போதும் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு கைத்தொழில் பிடிக்கலாம். சிலருக்கு இசை, வரைதல் பிடிக்கலாம். சிலருக்கு கணிதம் பிடிக்கலாம். ஏன் ஒரு சிலருக்கு ஆராய்ச்சி பிடிக்கலாம்.

எனவே 10ம் வகுப்பிற்கு பிறகு டிப்ளமோ எனும் தொழிற்கல்வி படித்து விட்டு, தொடர்ந்து கல்வியில் ஆர்வமுள்ளவர்கள் படிக்கும் முயற்சியை தொடர்வதால், தரம் உயரும் என்பது நிச்சயம். பல நாடுகளில் இந்த கல்வித் திட்டம் தான் உள்ளது.

மருத்துவம்

பொறியாளர்கள் ஒருவகை தொழில் நுட்ப கலைஞர்கள் என்பது சரி. ஆனால் மருத்துவம் என்பது மற்றொருவரின் உயிர் சம்பந்தப்பட்டது. மேலும் இது அரசியல் ஆக்கப்படக் கூடாது. தரமான கல்வி படித்துள்ள, அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள சமூக அக்கறையும், தொண்டு மனப்பான்மையும் கொண்டவர்கள் மட்டுமே, மருத்துவம் படிக்க வேண்டும்.

இப்படித்தான் உலக நாடுகளில் மருத்துவ படிப்பிற்கான திறமையான மாணவர்கள் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். பல கட்ட சோதனைகளுக்கு பிறகே, மருத்துவ கல்வி சீட் வழங்கப்படுகிறது.

* ஏன் அரசியல் வாதிகள் செல்வதில்லை *

வெறும் சரிகட்டப்பட்ட மதிப்பெண்களோடு, இட ஒதுக்கீடு என்ற மேலும் ஒரு பொதியோடு, மருத்துவத்தில் சேரும் மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்கலாம். அப்படியென்றால் அங்கு செல்பவர் ஏழைகள் தானே!! கொஞ்சம் சவுகரியம் இருப்பவர்கள் கூட அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்வதில்லை.

அரசியல்வாதிகள் அந்த பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டார்கள். பின் இந்த தரங்கெட்ட பள்ளி படிப்போடு, மருத்துவம் படிக்கும் மாணவர்கள் என்ன சிறந்த மருத்துவ ஆராய்ச்சியா செய்ய இயலும்!!

அரசியல் வாதிகளுக்கு இருக்கிறது உயர்தர மருத்துவமனைகள். வெளிநாட்டுகளில் ஆக தரம் வாய்ந்த மருத்துவ கல்வியை படித்துவிட்டு வரும் மருத்துவர்களிடம் தான் இவர்கள் செல்வார்கள்.

விடிவு வருமா??

தமிழகம் தோறும் அரசு பள்ளிகளுக்கு தரமான பாடத்திட்டம், தரமான ஆசிரியர்கள், விசேஷ பயிற்சி திட்டங்கள், தாய்மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் சிறப்பு பாடங்கள் என அரசு போர் கால நடவடிக்கையாக எடுத்தால் மட்டுமே, சமூக நீதி உண்மையாகவே நிலைபெறும்.

தரமற்ற கல்வியை கொடுத்து, அவர்களுக்கு ஒரு ஏட்டுச் சுரைக்காய் பட்டத்தை கொடுப்பதால் என்ன பயன்?? திறன் இல்லாத தொழிலாளியால் உயர்ந்த நிறுவனம் உலகில் எங்கேனும் உள்ளதா??

நீட் எதிர்ப்பு

இதனால் மட்டுமே நமது அரசியல்வாதிகள் இன்று வரை ‘‘பொது தேர்வு முறையை’’ எதிர்த்து வருகிறார்கள் நீட் தேர்வு முறையால் நமது தமிழக மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண்களை வைத்து தான் மருத்துவ சீட்டு என்றும் இல்லை. நீட் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது மட்டுமே தர கட்டுபாடு. இதற்கு கூட தகுதியில்லாதவர்கள் மருத்துவம் படிக்க வேண்டுமா என ஏன் பொது மக்கள் கேட்க கூடாது. ஆங்கிலம் தெரிய வேண்டும் என்று கூட இல்லை. தமிழில் கூட தேர்வு எழுதலாம். இன்னும் ஏன் தடை கேட்கிறார்கள் இந்த அரசியல் வாதிகளும், சமூக பொறுப்பாளிகளும்???