தேர்தல் நடைமுறை ஊழல்கள்,பணப்பட்டுவாடா,அதிகார துஸ்பிரயோகம், ஒரு இடைத்தேர்தலில் அதிக அளவில் போலீஸ் பந்தோபஸ்து, அதிக அளவில் தேர்தல் கமிஷனுக்காக ஊழியர் பங்கேற்பு, அதிக அளவில் துணைத் தேர்தல் அதிகாரிகள் நியமனம் என்ற பிரிவுகளில் 'திருமங்கலம் பார்முலாவை' பின்னுக்குத்தள்ளி புதிய சாதனை படைத்துள்ளது ரத்து செய்யப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்.
இந்த மாதிரி பிரிவுகளை கின்னஸ் நிறுவனம் சாதனை பட்டியலில் சேர்க்கவில்லை! சேர்ந்திருந்தால் தமிழ்நாடு முதல் பரிசை தட்டிச் சென்றிருக்கும் ! விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்திய பிறகுதான் 'ஆதாரபூர்வமாக' லஞ்சம், ஊழல், பணப் பட்டுவாடா எப்படி திட்டமிட்டு, வேலியே பயிரை மேய்ந்திருக்கிறது என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது !
எவ்வளவு ஆதாரம் கொடுத்தாலும் பழி போடுவார்கள் வாயை, பெவிகால் வைத்து பூசினாலும் அடைக்க முடியாது! ஆயினும் உண்மை எப்போதும் வெளிப்படையானது! அவைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருந்தாலும், விஜயபாஸ்கர் வீட்டு ரெய்டு தேர்தல் முடிந்த பிறகு செய்திருக்கக் கூடாதா? இது அரசியல் உள்நோக்கம் கொண்டது!
சாதாரண காலங்களில் வருமான வரித்துறை ஆதாரங்களை சேர்த்து, சோதனையிட்டு, பறிமுதல் செய்வார்கள்! தேர்தல் காலங்களில், தேர்தல் கமிஷனால் போடப்பட்ட பறக்கும் படை என்பன கண்டுபிடிக்கும் ஆதாரங்கள், வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும்.
அவர்கள் 24 மணி நேரமும் சோதனை செய்ய அதிகார பெற்றவர்கள் 2012 ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் இது மாதிரி வழக்கில் தேர்தல் கால சோதனைகளுக்கு தேர்தல் கமிஷனின் உத்தரவுகள் சட்டபூர்வமானது என அங்கீகரித்திருக்கிறது.
ஏப்ரல் 1லிருந்து 7 வரை, எழும்பூர் கென்னெட் சந்தில் உள்ள ஒரு லாட்ஜிலிருந்து ஆர்.கே நகருக்கு தினசரி பணப்பட்டுவாடா நடைபெற்றதை, ஆதாரங்களுடன் கண்டுபிடித்த தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர், அவர்களுக்கு கொடுத்த புகார்களுடம், வருமான வரித்துறையிடம் சேர்ப்பித்தனர் ! எனவே 'ரெய்டு' அரசியல் நோக்கமுமல்ல, தேர்தல் நேரத்திருக்கானதுமல்ல! ஆதாரங்கள் அடிப்படையிலானது.
விஜயபாஸ்கரின் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப வருமான வரித்துறை மறுத்தது என்பது பொய்யான குற்றச்சாட்டு! இதை வருமான வரித்துறை மறுத்துள்ளது!
விஜயபாஸ்கர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 அதிமுக மந்திரிகள்..
சட்டத்தை மீறி 'பிரஸ்' க்கு பேட்டியளித்த விஜயபாஸ்கர்..
அதிகாரிகள் முன்னிலையில், ஆவணங்களை எடுத்துக் கொண்டு ஓடி, 'கேட்'டுக்கு வெளியே வீசிய அவரது உதவியாளர்... என்பனவெல்லாம், விஜயபாஸ்கரின் 'தரத்'துக்குச் சான்று!
தேர்தலை நடத்தியிருந்தால் அரசுக்கு ஏற்பட்ட பல கோடி ரூபாய் இழப்பு தவிர்க்கப்பட்டிருக்குமே? மீண்டும் தேர்தலை நடத்தும்போது இதே ஊழல் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
தேர்தலை ரத்து செய்து தனது 29 பக்க தேர்தல் கமிஷன் அறிக்கையை பார்த்தால் எப்படி மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளது என்பது தெரியும்!
எத்தனை பிரிவுகள் வேலை செய்தது, எத்தனை புகார் வந்தது, எப்படி எப்படியெல்லாம் வாக்காளர்களுக்கு பணம், பொருள் கொடுக்கப்பட்டது, எதனை பேர் பிடிபட்டனர் என்பதையெல்லாம் விவரமாக சொன்ன தேர்தல் கமிஷன், நெஞ்சு பொறுக்காமல், மன வேதனையுடன் சொன்ன வார்த்தைகள் இவைதான்...
"புதுப்புது வழிமுறைகளில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது. செல்போன் ரீசார்ஜ், கடைகளில் பொருட்கள், பால்கார்டுகள், பரிசுப்பொருட்கள், வங்கிகே கணக்குகளில் நேரடி டெபாசிட்கும் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் என்றும் ஜனநாயக கடமையை ஆற்ற தேர்தல் கமிஷன் தேர்தலை நடத்தவேண்டியது கட்டாயம். ஆனால் தேர்தல் ஒரு சடங்காக மட்டும் இருக்கக்கூடாது. அது சுதந்திரமான நியாமான தேர்தலாக இருக்க வேண்டும். போட்டியிடும் வேட்பாளர் அனைவரும் சமத்தளத்திலிருந்து போட்டி போடவேண்டும். அதிகார துஷ்பிரயோகம், பணம் தலைவிரித்தாடுதல் ஆகியவற்றால் இங்கு சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்த முடியவில்லை. எனவே ரத்து செய்கிறோம்!"
எனவே,அரசுக்கு பண இழப்பு என்பதைவிட நமது அடிப்படை மூல்யங்கள் அழிந்துவிடாமலிருக்க தேர்தல் ரத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது !
பணப்பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க வேண்டிய தேர்தல் கமிஷனால் அதை தடுக்க முடியவில்லையே? வாக்காளர்கள் பணம் பெறாமல் ஒட்டுப் போடுவதில்லையே? பணம் பெற்று வாக்களிப்பது சகஜமாகிவிட்டதே? இப்படிப்பட்ட தேர்தல் ஜனநாயத்துக்கு நல்லதா ? இதுதான் தொடருமா?
மஞ்சள் பேட்டி, வெள்ளை பெட்டி என்ற கலர் கலர் பெட்டியில் வாக்களிக்கும் முறையில் தொடங்கி, வாக்கு சீட்டுக்கு மாறி, வாக்காளர் அடையாள அட்டை பெற்று, இன்று மின்னணு வாக்குப்பெட்டிக்கு மாறிய அளவு நமது தேர்தல் சீர்திருத்தம் வளர்ந்துள்ளது.
எனப்படும் வாக்குப்பெட்டியில் ஏதாவது 'கை வேலையை' காட்டினால் அது உடனே 'ஆப் ஆகிவிடும்' வகையில் நமது வடிவமைப்பு உயர்ந்துள்ளது.ஆகவே பூத் காப்சரிங், ஆள் மாறாட்டம் தவிர்க்கப்பட்டு வருகிறது!
ஆனாலும் தேர்தல் கமிஷனுக்கென்று தனி ஊழியர்கள் கிடையாது! ஏற்கனவே உள்ள மாநில அரசு ஊழியர்கள் தான் தேர்தல் காலங்களில் தற்காலிக தேர்தல் கமிஷன் ஊழியர்களாக பணிபுரிகிறார்கள். இவர்களை எளிதாக ஆளும் மாநில அரசுகள் மிரட்டி பணியவைக்கலாம்! இதுதான் தற்போது நடக்கிறது.
'தேர்தல் கமிஷனுக்கு பல் இல்லை. அது கடிக்காது, குறைக்க மட்டுமே' என்கிற விமர்சனங்கள், இதுவரை தேர்தல் நடத்தை விதிமீறலால் தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு போனவர்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் காணாததால் தேர்தல் கமிஷன் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. இதை மாற்றி நம்பிக்கை ஊட்ட வேண்டியதை மத்திய அரசு செய்ய வேண்டும் !
ஏற்கனவே தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட பூத்லெவல் ஏஜென்ட் நியமன அறிவிப்பால் தற்போது போலி வாக்காளர் சேர்ப்பு தடுக்கப் பட்டிருக்கிறது !
தேர்தல் காலங்களில் வாக்குக்கு பணம் பெற்று வாக்களிக்கும் பழக்கம் வெகுகாலமாகவே இருக்கிறது! இப்போது பணமும் அதை பெறும் வாக்காளர் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது கவலைக்குரிய விஷயம்!
முதலில் அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணம் நாம் கொடுத்த வரிப்பணத்திலிருந்து அவர்கள் அடித்த கொள்ளை. அதில் ஊசிமுனை அளவு நமக்கு கொடுத்துவிட்டு மேலும் கொள்ளை அடிக்க நிமிடம் உத்தரவு கேக்கிறார்கள்!
நம்முடைய வரிப்பணம் நம்பகுதிக்கு முழுமையாக சென்றுவிடப்பட வேண்டுமானால், அதை தொட்டுப் பார்க்காத ஒருவனே தகுதியான எம்.எல்.ஏ ., எம்.பி , கவுன்சிலராவான்! அப்படிப்பட்டவரை தேர்ந்தெடுத்தாலே, நமக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள் வந்து சேரும்! ஜாதி, மதம், மொழியை காட்டி ஓட்டு வேட்டையாடும், அரசியல்வாதிகளிடம் பணத்துக்காக நம் வாக்கை ஒப்படைக்கப்பதும், நம் வாழ்வை ஒப்படைப்பதும் ஒன்றுதான். அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு அவர்களுக்கு நாம் அடிமை! இந்த அடிமைநிலையை ஏற்க மறுப்போர் பணம் பெறுவதில்லை.