ஆட்சியிலும், கட்சியிலும், தேசிய உணர்விலும், மாநில உரிமையைப் பாதுகாப்பதிலும்,கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதிலும் தமது ஆளுமையை நிலைநாட்டி இரும்பு மனுஷியாகத் திகழ்ந்து தமிழக மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். "உங்களால் நான்... உங்களுக்காகவே நான்" என்ற மந்திரச் சொல்லைப் பிரயோகித்து ஏழை எளிய மக்களின், குறிப்பாகப் பெண்களி‹ன் இதயத்தில் இடம் பிடித்து அம்மா என்று பாசத்தோடு அழைத்துப் போற்றப்படுபவர் முதல்வர் ஜெயலலிதா.

சிறுவயதிலேயே பரதநாட்டியத்தில் கலையரசியாகத் திகழ்ந்தார். திரைப்படத்துறையில் முடிசூடா ராணியாக விளங்கினார். அரசியலில் முடிசூடிய ராணியாக நல் ஆட்சி புரிந்தார். எம்.ஜி.ஆர். அவர்களால் தமது அரசியல் வாரிசாக அடையாளம் காட்டப்பட்ட இவர் அரசியலில் திராவிட இயக்கத்தில் வழிவந்தாலும் கடவுள் வழிபாட்டிலும் ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தினமும் பூஜைகள் செய்து கடவுளை வழிபட்ட பிறகே வெளியில் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வெளிப்படையாகக் கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபட்டுப் பிரார்த்தனைகளை நிறைவேற்றினார். தனது வெற்றிக்கும், திட்டங்களுக்கும், பணிகளுக்கும் என்றும் கடவுள் துணை இருப்பார் என்பதை உறுதியாக நம்பி, எந்த விதத் தயக்கமும் இல்லாமல் பலரும் வியக்கும் வண்ணம் துணிச்சலான முடிவுகளை எடுத்து எல்லாவற்றிலுமே வெற்றி கண்டார்.

முதல்வர் ஜெயலலிதா ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது ஆட்சி காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏராளமான திருக்கோயில்கள் புனரமைக்கப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டன. கோயில் தேர்கள் பழுது பார்க்கப்பட்டுத் தேர்த்திருவிழாக்கள் தவறாமல் நடைபெற்றன. மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த தேர்களுக்குப் பதில் புதிய தேர்கள் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டன. பல கோயில்களுக்குத் தங்கத்தேர்கள் செய்யப்பட்டன. கோயில் பசுக்கள் பராமரிக்கப்பட்டு நன்கு பாதுகாக்கப்பட்டன

வருமானமில்லாத கோயில்களில் ஒருகால பூஜையாவது நடைபெறப் புதிய திட்டத்தை உருவாக்கித் தினந்தோறும் தவறாமல் பூஜைகள் நடைபெற வழிவகுத்தவர் ஜெயலலிதா. இத்திட்டத்தில் மூலம் இதுவரை 12,500க்கும் மேற்பட்ட கோயில்களில் பூஜைகள் நடைபெறுகின்றன. கோயில்களில் பூஜைகளுக்குத் தேiவாயன கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பூஜை உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல கிராமக்கோயில்களும் புனரமைக்கப்பட்டுப் பூஜைகள் நடைபெற வழிவகை செய்யப்பட்டிருக்கின்றன. நலிவடைந்த நிலையிலுள்ள கிராமக்கோயில் பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கோயில்களுக்கு வழிபடவரும் பக்தர்களுக்குப் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கோயில்களில் அன்னதானத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இத்திட்டத்தில் மூலம் நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ ரங்கம் உட்பட ஒரு சில கோயில்களில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

கோயில் யானைகள் புத்துணர்வு பெற வருடந்தோறும் அந்த யானைகள் முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டுப் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தனது உடல் நிலையைக்கூடக் கருதாமல் எப்பொழுதும் சிந்தித்துச் சிந்தித்து மக்களுக்குப் பல புதுமையான நலத்திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தியிருக்கிறார். பசிப்பிணியைப் போக்க ரேஷன் கடைகளில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதாமாதம் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. ஏராளமான இடங்களில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு மிகக் குறைந்த விலையில் மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது.

பெண் சிசுக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் வகையில் தொட்டில் குழந்தைகள் குழந்தைகள் திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 4500க்கும் மேற்பட்ட பெண்குழந்தைகள் உயிரிழப்பிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு பல்வேறு ஆன்மீகத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியும், ஒவ்வொரு குடும்பமும் நேரடியாகப் பயன் பெற வழிவகுத்தும் மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தார். அவர் மறைந்தாலும் கோடிக்கணக்கான மக்களின் இதயச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்!