கட்டுமானத்துறை என்பது ஒருங்கிணைந்த டீமின் அவுட்புட் என்பார்கள். இங்கு எல்லோருக்குமே பங்கு உண்டு. எவருமே தனித்து இயங்க முடியாது. கட்டுமானத்துறைக்கு மூளை பொறியாளர் என்றால், மற்ற உறுப்புகள்தான் சைட் சூபர்வைசர், கான்ட்ராக்டர், மேஸ்திரி, கட்டு மானப் பணியாளர்கள், பிளம்பர், எலெக்ட்ரிசியன் போன்றோர் எனச் சொல்லலாம். இவர்களிடையே எத்தகைய நல்லுறவை பேணுகிறோம் என்பதில்தான் நமது வெற்றி இருக்கிறது. 

குறிப்பிட்ட நமது தொழிலுடன் சம்பந்தம் உள்ள கான்ட்ராக்டர். மேஸ்திரி. தொழிலாளி உடன் மேற்கண்டபடி எப்படி உறவை பேணுவது என பார்ப்போம்.

1) கான்ட்ராக்டரிடம் நாம் பயன்படுத்தும் வார்த்தையையும், அவரிடம் நாம் ஏற்படுத்தும் அணுகுமுறையையும், ஒரு மேஸ்திரியிடம் பயன்படுத்த முடியாது. அது போல் மேஸ்திரியிடம் பயன்படுத்தும் வார்த்தையையும், அணுகுமுறையையும் ஒரு தொழிலாளியிடம் பிரயோகிக்க முடியாது

2) ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாகத்தான் பழகியாக வேண்டும். எனவே, யாரிடம் எப்படி பேச வேண்டும், பழக வேண்டும்? என்பதில் நாம் எப்போதும் தெளிவாக இருந்தாலே எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க முடியும்.

3) தொழிலாளர்கள் நம்மிடம் எதை எதிர்பார்ப்பார்கள் என்றால், நம் பாராட்டுகளை. தன்னை கெளரவமாக நடத்த வேண்டும் என்பதை. இந்த இரு தன்மைக்கும் நீங்கள் நம்பகத்தன்மை உள்ளவர்களாகிவிட்டால் போதும், அவர்கள் உங்களுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருப்பார்கள்.

4) நாம் தொழிலாளர்களுக்கு சின்ன சின்ன உதவிகளைச் செய்வதால், அதாவது, பயணப்படி, சம்பளம் அல்லது உபரியாக சிறு தொகை , பண்டிகைக் கால செலவு, உடல் நலக் குறைவு உள்ள நாள் செலவு, அவர்களின் குழந்தை படிப்புச் செலவு, மற்றும் அவர்கள் வாழ்க்கை தரம் உயர நம்மால் முடிந்த உதவி என பல்வேறு சிறு சிறு உதவி செய்வதன் மூலம் அவர்களின் முழு ஒத்துழைப்பை நாம் பெற்று நம் லட்சியத்தை வெற்றிகரமாக எட்ட எளிதாக முடியும்.

5. மேஸ்திரி என்றால் அவர் தொழிலாளி நிலையில் இருந்து சற்று கூடுதல் அதிகாரம் பெற்றவர். எனவே, அவரை மரியாதையாக நடத்த வேண்டும். 10 ஆடுகளுக்கு ஒரு மேய்ப்பன் இல்லை என்றால், அந்த ஆடுகளின் நிலை அதோகதிதான். எனவே, மேஸ்திரி என்பவர் கட்டுமானப் பணியில் மிக முக்கியமானவர். நம் தொழிலில் வெற்றி என்பது கூட்டு முயற்சியால் விளைவதே என்பதை மறந்துவிடக்கூடாது.

6. மேஸ்திரி என்பவருக்கு, தொழிலாளியை விட ஒரு படி மேலான சலுகை மற்றும் மதிப்பை அளிக்க வேண்டும். அதைத்தான் அவர் எதிர்பார்ப்பார். அப்படி நாம் செய்தால்தான் அவருக்குக் கீழ் பணிபுரிபவர்கள் அவரை மதித்து, அவர் சொல் கேட்டு பணியாற்றுவார்கள். 

7. கான்ட்ராக்டர் என்பவர் நேரடியாக நம்முடன் தொடர்புடையவர். சொல்லப் போனால், நம் நிழலாகவே நம்முடன் இருப்பவர். எனவே, அவருக்கு நம்முடைய மதிப்பு, மரியாதையில் பாதி அளவு பங்குண்டு. அதை அவருக்கு நாம் வழங்கும்போது, அவர் நமக்கு, நம் வாழ்வு வளமாக, மிகுந்த உண்மைத் தன்மை உள்ளவராவார்.

உறவைப் பேணுவதில் கடைபிடிக்க வேண்டிய பொதுவான விதிகள் மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படும் வண்ணம் நடந்து கொள்ளக் கூடாது. குறை சொன்னால் கோபப்படாமல் அதில் எந்த அளவு உண்மை உள்ளது என தெரிந்து திருத்திக் கொள்ள வேண்டும். 

எல்லோரிடமும் எதிர்மறை எண்ணங்கள் உண்டு. அதை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். கருத்து வேறுபாடு இயல்பானது என நினைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டும், நீங்கள் செய்தால்தான் சரியாக இருக்கும் என்ற நினைப்பை விட்டு விடுங்கள். மற்றவர்களையும் உங்களுக்கு உதவிடச் செய்யுங்கள்.  நீங்கள் சரியில்லை என்று சொல்வது போல, சரியானதை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். 

பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளியாதீர்கள். பேசுங்கள், நேரடியாக எதிர் கொள்ளுங்கள்.எது உடனடிப் பலன் தரும் என்று எண்ணாதீர்கள். நீண்டகால பலனை நினையுங்கள்.  மனித இயல்பு என்னவென்றால், பிறர் தனக்கு கெளரவம் தரவேண்டும் என விரும்புவதுதான். எனவே இதை மனதில் இருத்தி மற்றவருடன் பழகுங்கள். 

பளிச்சென்ற தோற்றத்துடன் சற்றே கவர்ச்சியும், வசீகரமும் கலந்து என்னேரமும் வெளிப்படும்படி இருந்தாலே மற்றவர்கள் ஆர்வத்துடன் நம்மிடம் வந்து பழகுவார்கள்.

செயல்களைச் செய்யும் முறையில் நாம் காலத்தைக் கையாளுவது மனத்திற்குத் திருப்தியுள்ள ஒன்றாக அமைந்தாலும் அவைகளினால் நட்புறவு அமைகிறதா என்று ஆராய்வது அவசியம்.

நமக்கு நேரும் பொருள் மற்றும் சிறு இழப்புக்களால் பிறருக்கு ஒரு நன்மை விளையு மானால் நாமாக முன் வந்து விட்டுக் கொடுப்பது உறவை பலப்படுத்த உதவும். 

சந்திக்கும் நபர்களின் பேர்களை நினைவில் வைத்திருக்கும் திறன் வேண்டும்.தான் சார்ந்திருக்கும் தொழிலில் உள்ள அத்தனை பிரச்சனைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவற்றுக்காக சிந்திப்பவன் முதலாளியின் கவனத்தை கவர்கின்றான். அவனைத்தான் கூப்பிட்டு ஆலோசனை கேட்பார் முதலாளி.

குழப்பத்திலும், தளர்ச்சியிலும் செயல்படுவதை விட்டு விலகுவது கோழைத்தனம். எனவே மன உறுதியுடன், நம்பிக்கையுடன் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...

ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in

சந்தாவிற்கு... 98417 43850