பிரிகேஸ்ட் தொழிற்நுட்பம் இந்திய நகரங்களில் பயன்படுத்தப்பட்டு 20 ஆண்டு களுக்கும் மேலாகிறது. ஆனால், பெருவாரியான மக்கள் அதை பயன் படுத்தத் தயங்குகின்றனர்.

பிரிகேஸ்ட் தொழிற்நுட்பம் குறித்து தமிழக கட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகக் குறைந்த அளவு விழிப்புணர்வே காணப்படுகிறது. பொதுவாக கட்டுமானத்துறையில் அறிமுகப் படுத்தப்படும் புதிய கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமான தொழில்நுட்பம், பழமைவாதிகள்  அதிகமுள்ள நம் நாட்டில் இலகுவில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 

அடுத்து புதிய தொழில்நுட்பம் குறித்து விரைந்து விழிப்புணர்வு ஏற்படும் அளவிற்கு பெரும்பான்மையான கட்டுநர்கள் போதிய தொழில்நுட்ப அறிவு படைத்தவர்களல்ல. அதிலும் சிறு பில்டர்கள் தங்கள் கட்டுமானப் பணிகளில் இன்னும் செங்கற்களைத் தாண்டியே வராத போது பிரிகேஸ்ட் தொழிற்நுட்பம் ஏதோ அயல்நாட்டுத் தொழிற்நுட்பமாகவே கருதப் படுகிறது.

பிரிகேஸ்ட் தொழில்நுட்பம் மூலம் கட்டுமான நேரம் குறைகிறது ஒரே அளவுகளில் பல யூனிட்கள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவதால் கட்டு மானச் செலவு குறைகிறது. முதலீடு விரைவில் திரும்பப் பெறபடுகிறது. கட்டுமான பணித்தளங்களில் திறன்மிகு பணியாளர்கள் மற்றும் பணித்தளமேற்பார்வையாளர்கள் தேவை குறைகிறது. 

பணித்தளங்களின் அருகில் வசிப்பவர்களுக்கு இடையூறுகள், சுகாதாரப் பாதிப்பு குறைகிறது. கட்டிட பாகங்கள் உயர்ந்த தரக் கட்டுப்பாடுடன் அமைகின்றன. அறைகளின் அளவுகளில் தவறுகள் ஏற்படுவதில்லை. கட்டுமானப் பொருட்களின் சேதாரம் குறைகிறது, வெப்பத் தடுப்பு, ஒலி தடுப்பு, காற்றுப் புகாத பகுதிகள் அமைத்தல் போன்ற பணிகள் இலகுவாக மேற்கொள்ளப்படலாம்.

இத்தனை நன்மைகள் பிரிகேஸ்ட்டில் இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கட்டுமானத்துறை புதுமைகளை எளிதில் ஏற்பதில்லை. மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற உரிமையாளரின் அச்ச உணர்வு மற்றும் இம்முறையில் கட்டுநர்களின் முன் அனுபவமின்மை. அத்துடன் ரிஸ்க் எடுக்கும் துணிவின்மை போன்ற காரணங்களால் இம்முறையை அநேகர் பின்பற்ற முயற்சி செய்வ தில்லை. 

பிரிகேஸ்ட் கட்டமைப்புகளில் இணைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. இக்கட்டிடங்களுக்கு நில நடுக்க விசைகளைத் தாங்கும் திறன் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால், தரமான இணைப்புகள் மற்றும் சிறப்பு முறைகள் மூலம் இத்திறன் அதிகரிக்கப்படலாம்.

முதலில் சிலர் பயன்படுத்தி அதைப் பார்த்தபின்தான் பிறகும் அம்முறையில் பின்பற்ற விழைவார்கள். அடுத்து நல்ல தரத்துடன் கட்டிடப் பாகங்களை குறைந்த விலையில் தயாரித்து வழங்கக் கூடிய நிறுவனங்கள் போதிய அளவில் இல்லாமையும் இதற்கு ஒரு காரணமாகும்.

மிக வேகமான கட்டுமானங்களுக்கு ஒரே தீர்வாக இருக்கும் பிரிகேஸ்டில் சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.  பிரிகேஸ்ட் கட்டமைப்புகளில் இணைப்புகள் அதிகம் உள்ளதால் நீர்க்கசிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.எளிய பகுதிகளை தொழிற்சாலைகளில் இருந்து பணித்தளங்களுக்கு மாற்றுவது சிரமம் இதற்கென தனி வகையான இயந்திரங்கள், தூக்கிகள், டிரக்குகள் தேவைப்படுகின்றன. பணித்தளங்களில் பணியாற்றும் பல வகை திறன் மிகு பணியாளர்களின் வேலை வாய்ப்புகள் குறையும். எல்லாவற்ஷீற்கும் மேலாக, இம்முறையைப் பின்பற்றும் அனைத்து கட்டிடங்களும் ஒரு சில வரையறுக்கப்பட்ட அளவுகளில் அமைக்கப்படுவதால், ஒரே மாதிரியாக தோற்றமளிக்கும். பெரும்பாலான உரிமையாளர்கள் தங்கள் கட்டிடம், பிற கட்டிடங்களைப் போன்று இல்லாமல், தனித்தன்மையுடன் தோற்றமளிக்க வேண்டுமென்றே விரும்புகிறார்கள். 

அவர்களுக்கு இம்முறை உதவாது. ஏனெனில் பிரிகேஸ்ட் சமச்சீரானவை. புடைப்பு, வளைவு போன்ற முகப்புத் தோற்றங்களுக்கு பிரிகேஸ்ட் பெரும்பாலும் பொருந்தாது. ஆனால், அளப்பதற்கரிய நன்மைகளை அள்ளித்தரும் பிரிகேஸ்டின் பெருமையை இக்குறைபாடுகள் குறைக்க முடியாது.

ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளில் 40 ஆண்டுகளுக்கு முன்பே பிரபலமானது இந்த முறை இன்னும் நம் நாட்டில் நுழைவாயில்தான் நிற்கிறது. புதிய தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் நாம் வழக்கம் போல பின்தங்கியிருக்கிறோம்.  

அரசு கட்டாயப்படுத்தினால் தவிர, பிரிகேஸ்ட் இந்தியாவில் வளர்ச்சியடைய வாய்ப்பு மிகக் குறைவு அல்லது கல், மணல், செங்கல், சிமெண்ட் போன்ற பொருட்கள் தனி மனிதனால் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே பிரிகேஸ்ட் பாகங்களை வாங்கி வீடு கட்ட மக்கள் முன் வருவார்கள்.

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...

ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in

சந்தாவிற்கு... 98417 43850