விலை அதிகமானதெல்லாம் தரமானது எனக் கருதும் இந்த நுகர்வோர் கலாச்சாரத்தில் ‘பெரிய நிறுவனங்கள் எல்லாம் சிறந்த நிறுவனங்கள்’ என்கிற இன்னொரு தப்பிதமும் ஒளிந்திருக்கிறது.

ஜி+2 கட்டும் ஒரு படிக்காத காண்ட்ராக்டர் எழுதும் எல்லா ஒப்பந்தங்களையும் பக்கம், பக்கமாகப் படித்து ஒன்றுக்கு இரண்டு தடவை ஆய்வு செய்து, விவாதங்கள் புரிந்து, பேரம் செய்து ஒரு வித சந்தேகத்துடனே ஒப்பந்தத்தில் கையயாப்பம் இடும் பொதுமக்கள் பெரிய கட்டுமான நிறுவனங்கள் என்றால், அப்படியே அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு விடுவார்கள். அவர்களது ரிசப்rன் பெண்கள் பேசும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் சத்தியத்தைக் காண்பார்கள்.

‘அவங்க நம்மையா ஏமாற்றப் போகிறாங்க!’ ‘அவங்க எவ்வளவு பெரிய கம்பெனி!’ ‘அவங்க எத்தனை நகரங்களில் புராஜெக்ட் செய்றாங்க!’ எனப்படுகிற மன முத்திரைகளில் மிகச் சீக்கிரமாகவே பொதுமக்களின் நம்பகத்தன்மைப் பெற்று விடுகின்றன. பெரிய கார்ப் ரேட் கட்டுமான நிறுவனங்கள்.

எல்லா நிறுவனங்களும் இதுபோன்ற செயல்களைச் செய்வதில்லை. பல நிறுவனங்கள் கட்டுமானத்தொழிலை உச்சத்திற்குக் கொண்டுச் செல்கின்றன. சில நிறுவனங்களோ, கட்டுமானத்தொழிலில் கல்லெறிந்து. கிடைத்த வரை லாபம் சுருட்டுகின்றன.

லேட்டஸ்டாக கல்லெறிந்திருப்பது காசா கிராண்டே.


நடிகர் கார்த்தி தோன்றும் ‘கடலலையோடு கொஞ்ச நேரம்’, ‘ஈ.சி.ஆரில் ஹாலிடே’ எனத் துவங்கும் அந்த டிவி விளம்பரத்தை நாம் பிரமித்துப் பார்த்திருப்போம். ‘பக்கத்துலேயே ஆஃபிஸ், பக்கத்திலேயே பீச்,மாயஜல்லுக்கு ஜஸ்ட் பின்னாடி’ என ஆசை வார்த்தைகளை கார்த்தி அள்ளித் தெளிக்கும் அந்த ‘ஓ.எம்.ஆர், பெருங்குடி காசா கிராண்டே 14’ என்கிற புராஜெக்டின்,விளம்பரம் டிவி, திரையரங்குகளில் மட்டுமல்லாது, ஆங்கிலம், தமிழ் நாளேடுகளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தின.

காசா கிராண்டே நிறுவனம் மிகப்பெரிய அடுக்கு மாடி புராஜெக்ட்டுகள் பலவற்றை உருவாக்கிய நிறுவனம் என்பதால், வாடிக்கையாளர்களிடையே அந்நிறுவனம் பற்ஷீ நல்ல அபிப்ராயம் இருப்பது உண்மை தான். அதனால் தான் வீட்டு விற்பனை மந்தமான சூழ்நிலையில் கூட, அவர்களால் அத்தனைச் செலவு செய்து, விளம்பரம் கொடுத்து வீடுகளை விற்க முடிந்தது.

ஆனால், ஓஎம்.ஆர், செம்மஞ்சேரி , திருவள்ளூர் சாலையில், குலசேகரன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், ஜே.வி முறையில், ‘ஈ.சி.ஆர் 14’ என்கிற, குடியிருப்புப் புராஜெக்ட்டுக்காக வாங்கிய நிலத்திற்குப் பணம் தராமல், வெறும் ‘பவர் ஆஃப் அட்டர்னி’ பெற்று, அதன் மூலம் புராஜக்டை முடித்து, போலி உரிம ஆவணங்களைத் தயாரித்து வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்றுவிட்டது காசா கிரான்டே.

நியாயமாக நில உரிமையாளர்களுக்குச் சேர வேன்டிய ரூ.20 கோடி பணத்தைத் தராமல் ஏமாற்ஷீ மோசடிசெய்ததாக சென்ற மாதம் நாளேடுகளில் செய்திகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தின. நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரான அனிருதன் கைது செய்யப்பட்டு 15 நாள் விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

காசா கிராண்டே பிரைவேட் நிறுவனம் சென்னை, கோவை, பெங்களூரில் கடந்த பத்தாண் டுகளில் 68 குடியிருப்புப் புராஜெக் டுகளை கட்டித் தந்துள்ளது. சென்னையில் ஓ.எம்.ஆர், ஈசிஆர், திநகர், போரூர், அண்ணா நகர், ஒரகடம், தாம்பரம், பாடி போன்ற பல இடங்களில் பரவலாக புராஜெக்டுகளை முடித்து விற்பனை செய்திருக்கின்றன.

நகருக்குள்ளேயும், புறநகர் பகுதிகளிலும் ஒரே சமயத்தில் மல்டி புராஜெக்ட் செய்யக்கூடிய மிகச் சில பில்டர்களுள் காசா கிராண்டேயும் ஒன்று. அவர்களது வாடிக்கையாளர்களில் பெரும்பாலும், காசா கிரண்டாவின் செயல்பாடுகளை நல்ல வித
மாகத் தான் எடுத்துரைக்கிறார்கள். ஆனால், நாணயம் என்பது வாடிக்கையாளர்களிடம் மட்டும்கடைபிடிக்கக் கூடியதல்லவே. யாரிடமிருந்து ஜே.வி முறையில் நிலம் பெற்றோமோ? அவரிடம் ஒப்புக்கொண்டபடி, வீடுகள் அல்லது அதற்குச் சமமான பணத்தினை வழங்கி உரிய ஆவணங்களைப் பெற்று அதை மறுசீரமைத்து தனது வாடிக்கயாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமல்லவா?

ஆனால், நிலத்தின் உரிமையாளருக்கு உரிய நிதி வழங்காமலேயே நிலத்தை அபகரித்து வீடு கட்டி, ஏக போக உரிமை கொண்டாடி வீடுகள் விற்றிருக்கிறது காசு மேல் ஆசை கொண்ட காசா கிராண்டே.

‘காசா கிராண்டே செய்திருப்பது பச்சை நில மோசடி. இச்செயல் மூலம் ஜே.வி மீது மக்களுக்கு நம்பிக்கை குறையும்’ என கொதிக்கிறார் சென்னையைச் சேர்ந்த கட்டுநர் ஒருவர்.

தம் பெயரை வெளியிடுவதை விரும்பாத அவர் நம்மிடையே கூறுகையில்,‘‘பல மாதங்களாக நியாயத்துக்காக போராடியிருக் கிறார் நில உரிமையாளர் குல சேகரன். ஆனால், காவல் நிலை யங்கள் வழக்குப்பதிவு செய்யவே இல்லை. இது ஒன்றே போதும், காசா கிரான்டே மோசடி செய்திருக்கிறது 
என்பதற்கு..

நில உரிமையாளரிடமிருந்து, பவர் எழுதி வாங்கி வீடு கட்டி விற்று விட்டு, இப்போது ’பவர் என்னிடம் இருக்கிறது, ஒரு பைசா கூட தரமாட்டேன்’ என ஒரு கட்டுநரால் சொல்ல முடிகிறது என்றால், அவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் எத்தனை செல்வாக்கு இருக்க முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

இயக்குநர்களில் ஒருவரான அனிருதன் சிறைக்குச் சென்றார். அதிகபட்சம் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் வெளியே வந்து விடுவார். பிறகு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும். வாய்தா, வாய்தா என பல ஆண்டுகள் இவ்வழக்கு நடைபெறும். கடைசியில் நில உரிமையாளருக்கு நீதியும், நிதியும் கிடைக்க பல ஆண்டுகளாகும். இப்போது 20 கோடிக்கு வட்டி என்ன ஆகிறது? அந்தப் பணம் அந்த நில உரிமையாளருக்கு நட்டம் தானே?‘‘ என விவரிக்கிறார் அந்தக் கட்டுநர்.

காசா கிரான்டே சார்பாக என்ன பதில் சொல்லப்படுகிறது?

‘‘அது . பதில் அல்ல, சாக்கு. இவர்களே ஒரு ஆளை வைத்து அந்த நிலத்தில் உரிமை கொண்டாடி, ஒரு புகாரைப் போட வைத்து, பின் அதை வைத்து நில உரிமையாளாரிடம், சொத்தில் பிரச்சனை இருக்கிறது. அதைத் தீர்த்து விட்டு, வா என அலைக்கழித்தி ருக்கிறார்கள். இந்த விஷயத்தில் திரு. குலசேகர் திட்டமிட்டுஏமாற்றப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.‘‘

சரி, நீங்கள் சொல்வது போல, அந்நிறுவனம் ஏமாற்றியிருந்தாலும், இது போல மோசடிகள் செய்வதால், அந்நிறுவனத்தின் நற்மதிப்பு குறையுமே, இனி வரும் நாள்களில் ஜேவி என்று நில உரிமையாளர்களைத் தேடிப் போக அவர்களால் முடியுமா?

‘‘நற்மதிப்பைத் தூக்கிப் போடுங்கள். மக்கள் அதெல்லாம் இப்போது எங்குப் பார்க்கிறார்கள்? விலை அதிகம் தருகிறார்கள் என்றால், லேன்ட் ஓனர்கள் மொத்தமாக போய் விழுகிறார்கள். மேலும், வெளிச்சத்துக்கு வந்திருக்கும் ஒரு வழக்கு தான் இது. இந்நிறுவனம் இதற்கு முன்பும் பல அப்பாவி நில உரிமையாளர்களை ஏமாற்றியிருக்காது என்பதற்கு என்ன நிச்சயம்? அந்நிறுவனத்திற்கு ஏராளமான நிலங்கள் உள்ளதால், அடுத்த சில ஆண்டு களுக்கு நிலம் பற்றிய கவலை இருக்காது.

அதுமட்டுமல்ல, இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு இதை யார் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்போகிறார்கள். ‘ஜேவிக்கு நிலம் தேவை ’என ஒரு அறிவிப்பு வரட்டும். விழுந்தடித்துப் போய், நிலத்தைக்கொடுத்து ஏமாறுவார்கள்.‘‘

ஆனால், இந்த வழக்கு தொடர்பான செய்திகளில், இன்னொரு இயக்குநரான அருண்குமாரைப் பற்றி செய்திகள் ஏதும் வரவில்லையே..!

‘‘அது தான் பிரைவேட் லிமிடெட் நிறுவனம். குறிப்பிட்ட நிலம் தொடர்பான, பேரம், ஒப்பந்தம், பவர், வழக்கு எதுவாக இருந்தாலும் ஒரு இயக்குநர் பார்த்துக் கொள்வார். அவர் மீது மட்டும் தான் புகார் எடுக்க முடியும். இன்னொருவர் ஹாயாக இருப்பார்‘‘ என இந்த வழக்கின் பின்னணியை எடுத்துரைத்தார்.

காசா கிராண்டேவின் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு நியாயத்தினை (அப்படி ஒன்று இருந்தால்) அறிய அந்நிறுவனத்தின் ஊடகச் செய்தியாளரை திரு. தினேஷ் என்பவரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை.இது தொடர்பாக நமக்கு எழும் இன்னும் சில ஐயங்கள்..

1. தான் கட்டி விற்கும் வீடுகளின் நிலம் வேறு ஒரு நில உரிமையாளருக்குச் சொந்தமானது என்றும், நாங்கள் ஜேவி முறையில் நிலம் வாங்கி விற்கிறோம் என்பது வெளிப்படையாக இந்த புராஜெக்டில் தனது வாடிக்கையாளர்களுக்குச் சொல்லப்பட்டதா? அது அவசியமில்லையா?

2. இன்னொருவருக்குச் சொந்தமான இடத்தில் வீடுகளைக் கட்டி, பொய்யான ஆவணங்கள் தயாரித்து வாடிக்கையாளருக்கு வீடுகள் விற்ற, காசா கிராண்டே மீது, அந்நிறுவனம் சார்ந்துள்ள கட்டுமானச் சங்கங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன? அந்தச் சங்கங்கள் ஏன் இதுவரை காசா கிராண்டாவின் நில அபகரிப்புச் செயலை இதுவரை கண்டிக்காமல் இருக்கின்றன?

3. குறைந்தபட்சம் வழக்கு முடியும் வரை, காசா கிராண்டாவை அதன் உறுப்பினர் பட்டியிலில் இருந்து நீக்குவார்களா?

4. காசா கிராண்டே செய்து வந்த பல ஜேவி புராஜெக்ட்களிலும் இது போன்ற பிரச்சனைகள் நிகழ்ந்திருக்குமா? அப்படி நிகழ்ந்தது எனில், அதன் நில உரிமையாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய தீர்வுகள் என்ன?

5. ஊடகங்கள் பெரும்பாலும், ‘காசா கிராண்டே அதிபர் கைது!’ எனச் செய்தியைப் போடாமல், ‘பிரபல கட்டுமான நிறுவன அதிபர் கைது’ என்று ஒளிந்து கொள்வதற்கு காசா கிராண்டே நிறுவனம் வழங்கிய விளம்பரங்கள் தான் என்றால், இந்த சமூகத்தின் என்ன நன்மைக்காக பத்திரிகை நடத்துகிறார்கள்?

6. ஏப்ரல் 18 வரை அனிருதன் காவலுக்கு வைக்கப்படுவதாக செய்திகள் வந்தன். ஆனால் ஏப்ரல் 18 க்கு பிறகு இந்த வழக்கின் நிலை என்ன? என்பதை ஏன் எந்த ஊடகங்களும் செய்தி வெளியிடாமல் மெளனம் காக்கின்றன?

மவுலிவாக்கத்தில் ஒரு பேராசை கொண்ட அறிவிழந்த கட்டுநரின் செயல்பாடு சுமார் மூன்று ஆண்டுகாலம் சென்னை, அடுக்குமாடிச் சந்தையை ஆழத்தில் தள்ளிவிட்டதை நாம் அறிவோம். இப்போது காசா கிராண்டே நிறுவனம் தனது நம்பகத்தன்மையற்ற செயல்பாட்டால் இன்னொரு விபத்தினை அடுக்குமாடி குடியிருப்புச் சந்தையில் நிகழ்த்தியுள்ளது. 
அதைச் சரிச் செய்யும் பொறுப்பு நீதி துறைக்கு மட்டுமல்ல வாய்மூடி மெளனமாக உள்ள மற்ற கட்டுநர்கள், பத்திரிகைகளுக்கும் உண்டு.

- பில்டரஸ் லைன் மாத இதழிலிருந்து ..
முழு இதழினையும் படிக்க.. www.buildersline.in
சந்தா செலுத்த .. 88254 79234