கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் ஏழை எளிய குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு, சேர்க்கையின்போதே அளிக்கவேண்டும் என்பது விதிமுறை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்கள் இந்த 25% இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டியது இல்லை என்று வகுக்கப்பட்டுள்ள விதிமுறை சமூக நீதிக்கு எதிரானது. இருப்பினும் இதை வெளிப்படையாகச் சொல்ல பலரும் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

சிறுபான்மையினருக்கு எதிரானதாக இதை கருதக்கூடாது. அனைத்து தரப்பினரும் சமமாக நடத்தப்பட வேண்டும். இவ்வாறு பாரபட்சம் இன்றி அனைவரும் நடத்தப்படுவதே உண்மையான சமூக நீதியும் சமய நீதியும் ஆகும்.

இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 9.82 லட்சம் மாணவர்களில் 9.26 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ் டூ தேர்வில் 100 சதவீத தேர்ச்சி என்பதை எல்லா பள்ளிகளும் இலக்காகக் கொண்டு இயங்குகின்றன. இதனால்தான் 480 மதிப்பெண்களுக்கு குறையாமல் எடுத்துள்ள மாணவர்களுக்கு மட்டுமே முதல் தொகுதி ( உயிரியல் அல்லது கணினி அறிவியல், இயற்கையியல், வேதியியல், கணிதம்) வாய்ப்பு வழங்கப்படுகிறது. அடுத்தப்படியாக அறிவியலுக்கும் அதற்கு அடுத்து வர்த்தகப் பிரிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கலைப்பிரிவு கடைசி இடத்துக்கு தள்ளப்படுகிறது.

அனைத்து வகை பள்ளிகளில் மேல்நிலைப் கல்வி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு எந்த அடிப்படையில் விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை.பல மாவட்டங்களில் சிறுபான்மையினர் பள்ளிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றன. இத்தகைய சூழலில் அந்த பள்ளியில் பயின்ற மாணவருக்கே விரும்பிய பாடத்தை தேர்வு செய்யும் நிலை மறுக்கப்பட்டுவிடுகிறது.எனவே சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை உடனே ரத்து செய்யவேண்டும் என்று பெற்றோர்களும் மாணவர்களும் வற்புறுத்துவது நியாயமானதே.

சிறுபான்மையினர் பள்ளிகளில் 50 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என பாரபட்சம் நிலவுகிறது.இதிலும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு வரம்புக்கு அதிகமாக சலுகை காட்டப்படுகிறது.இது மாணவர்களின் கல்வித்தரத்தை பாதிக்கும் என்பதால் இதையும் ரத்து செய்ய வேண்டும்.