• ஹைதராபாத்தை சேர்ந்த முஷ்டாக் உத்தீன்- நாஸ்மீன் தம்பதி துபாயில் வேலை பார்த்துவந்துள்ளனர்.ஒருகட்டத்தில் இருவரும் சொந்த நாடு திரும்பிய போது நாஷ்மீனை அவர் வீட்டில் விட்டுவிட்டு உத்தீன் மட்டும் துபாய் திரும்பிவிட்டார். பின்னர் அங்கிருந்து தனது மனைவியை தலாக் செய்துவிட்டதாக செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்துள்ளார். தனக்கு அநியாயம் இழைத்துள்ளதை எதிர்த்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளார் நாஸ்மீன்.
  • தன் மனைவியை விவாகரத்து செய்வதாக கணவர் அலைபேசியில் தலாக் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் இன்னொருவர்.
  • ஏன், வெறும் கடிதம் மூலமாக கூட தலாக் என்று எழுதி விவாகரத்து பெற்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
"தலாக்"கை இஸ்லாமியப் பெண்கள் எதிர்ப்பது அதிகரித்து வருகிறது.

இப்படியெல்லாம் விவாகரத்து பெற்ற  பின்பு அந்த பெண்ணிற்கு கொடுக்கவேண்டிய ஜீவனாம்ச தொகையைப் பற்றி யாரும் கவைப்படுவதில்லை என்பது ஒரு உதாரணம். இதன் விளைவாகவே சென்ற வருடம் இரண்டு முஸ்லீம் பெண்கள் உயர் நீதிமன்றத்தில் முத்தலாக்கை தடை செய்ய வேண்டும் என வழக்குத் தொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல இடங்களில் தலாக்கை எதிர்த்து முஸ்லீம் பெண்கள் வழக்கு தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஒருவர் தனது மனைவியிடம் மூன்று முறை தலாக் என்று கூறினால் அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று அர்த்தமாம். வீட்டில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்குக் கூட தலாக் சொல்லி எளிதில் விவகாரத்து செய்துவிடுகின்றனர். ஆண்கள் பல சந்தர்ப்பத்தில் வேறு பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு இந்த முறையை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

தலாக் செய்வதற்கென்று விதிகள் உள்ளது. ஒருவர் ஒரே சமயத்தில் 3 முறை தன் மனைவியிடம் தலாக் சொல்லி விவாகரத்து செய்ய முடியாது. 3 முறை தலாக் சொல்லுவதற்கு ஒரு குறிப்பிட்ட அவகாசத்தை பின்பற்ற வேண்டும். தலாக்கை மனைவியிடம் நேரடியாகத்தான் கூறவேண்டும். இப்படி பல விதிகள் இருந்தாலும் எந்த விதியுமே பின்பற்றப்படுவதில்லை.

இப்போது நேரடியாக பெண்களே தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது பொதுமக்களை சிந்திக்க வைக்கிறது.

பெண்கள் மட்டுமில்லாமல் சில முஸ்லீம் அமைப்புகளும் மெல்ல மெல்ல தலாக்கிற்கு எதிராக தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக உலகப்புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவின் திவான் அலிகான், ' முன்னேறிய நாகரிகத்திற்கு தலாக் முறை சரிபட்டுவராது. எனவே இதை கைவிட வேண்டும்' என்றார்.

22 முஸ்லீம் நாடுகள் தலாக்கிற்குத் தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.