நாங்கள் கடந்த ஆண்டு 2016 நவம்பர் மாதம், இலயோலா கல்லூரியின் புறசேவைத்துறை வாயிலாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில், கிராமப்புற முகாமிற்குச் சென்றிருந்தோம். அது பண மதிப்பிழப்பு மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நேரம். அங்கே நாங்கள் வடக்கு சாத்திப்பட்டு கிராம மக்களிடம் பணமதிப்பிழப்பினால் தங்கள் கிராம வாழ்வில் ஏற்பட்ட அதிர்வுகளைக் கண்டு கேட்டறிந்தோம். அங்கே பெரும்பாலும் விவசாயம் செய்யும் மக்கள் முந்திரி, கடலை, கிழங்கு வகைகள் மற்றும் கரும்பை விளைவிக்கிறார்கள்.
அந்த கிராமத்தில் இரண்டு வங்கிகள் உள்ளன. ஒன்று பல்லவா வங்கி, மற்றொன்று 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எஸ்.பி.ஐ வங்கி. பணமதிப்பிழப்பு காரணமாக, அங்கே உயர்ந்த மதிப்பிலான புதிய 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் வங்கிகளைச் சரியான நேரத்தில் சென்றடையாததால், மக்கள் பழைய ரூபாய் தாள்களை மாற்ற முடியவில்லை. அவர்களால் சம்பளத்தைக் கொடுக்கவோ, வாங்கவோ முடியவில்லை. அதைத் தொடர்ந்து அவர்களால் மற்ற பணப்பரிவர்தனைகளைச் செய்ய இயலவில்லை. கீழ்க்காணும் தலைப்புகளில் பணமதிப்பிழப்பினால் கிராமப்புறங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைக் காணலாம்.
அறிவிப்பு: புழக்கத்திலிருக்கும் ரூபாய் நோட்டின் மதிப்பினை நீக்கித் திரும்பப்பெறுதல் மதிப்பிழப்பு எனப்படும். கடந்த நவம்பர் மாதம் 8, 2016 இரவு இதனை நம் இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் அறிவித்தார். அறிவித்த நாள் முதல் இன்று வரை மக்கள் படும் வேதனையைச் சொல்லி மாளாது.புழக்கத்திலிருந்த 15.44 இலட்சம் கோடி அதாவது 86 சதவீதம் புழக்கத்திலிருக்கும் உயர் மதிப்பு நோட்டுகளான 500 மற்றும் 1000 ரூபாயினை செல்லா நோட்டுகளாக மாற்றினார் பிரதமர்.
பண மதிப்பிழப்பின் காரணத்தை இது வரையில் பிரதமரோ, நிதி அமைச்சரோ அல்லது ரிசர்வ் வங்கி ஆளுநரோ முறையாக தெரிவிக்கவில்லை. ஆனால் இதை ஊடகங்கள் தெரிவிக்கும் போது கருப்புப் பணத்தை ஒழிப்பது, தீவிரவாதத்துக்கு நிதி வழங்குவதை தடுப்பது மற்றும் கள்ள நோட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்றே சொல்கின்றார்கள். ஆனால் இதனால் பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்று சரியாக விளக்கவில்லை.
இயல்பு நிலை மாற்றம்: இந்த அறிவிப்பால் இந்திய மக்கள் பெரும் சிரமத்திற்க்கு ஆளாகியுள்ளனர். இது மட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 4500 ரூபாய் மட்டுமே மாற்றப்படும் என்றும் மற்றொரு நாள் 2000 ரூபாய் மட்டுமே மாற்றப்படும் என்றும் மாறி மாறி சட்டங்களை வெளியிடுகிறது வங்கிகள். இதை பெற மக்கள் வங்கிகளை நோக்கிபடையெடுத்தனர்.இதனால் வங்கியின் முன் நிற்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது சட்டங்கள், புதுப்புது முறைகளைக் கையாளுகிறது வங்கிகள். ஒரு நாள் 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே விநியோகம் மற்றொரு நாள் 100, 50, 20, 10 நோட்டுகள் விநியோகம், ஒரு வாரத்திற்கு 24000 ரூபாய் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு தானியங்கி இயந்திரம் அதாவது ஏடிஎம்மிலிருந்து 2000 ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என்று வெவ்வேறு உத்திகளைக் கையாளுகிறது வங்கிகள். இந்த அறிவிப்புகளின் காரணமாக மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கிகளின் முன் கால்கடுக்க நின்று கொண்டிருக்கிறார்கள். அப்படியே மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றினாலும், உயர் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே பெறுகிறார்கள். அந்த 2000 ரூபாய் நோட்டுக்குச் சில்லரை மாற்றுவது என்பது சிக்கலாக உள்ளது.
சிறு, குறு தொழில்கள் பாதிப்பு:
கூலித் தொழில் செய்யும் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.தாம் செய்த வேலைக்கு முதலாளியிடம் கூலி கேட்டால், முதலாளி வங்கியில் தன்னால் பணம் எடுக்க முடியவில்லை என்கிறார். இதை எதிர்த்து கேள்வி கேட்கும் தொழிலாளியிடம் மறுநாளிலிருந்து வேலைக்கு வர வேண்டாமென்று கூறுகிறார்.
இதனால் பாதிப்படைபவர்கள் கூலித்தொழிலாளிகள் மட்டுமல்ல முதலாளிகளும் தான். மற்றொரு புறம் பணப்பற்றாக்குறை காரணமாக என்னால் உங்களுக்கு சரியான கூலி வழங்க முடியவில்லை என்று அவர்களை வேலையிலிருந்து நிறுத்திவிடுகின்றனர். ஆகவே அமைப்பு சாரா கூலித்தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
சுய தொழில் பாதிப்பு:
இப்படியிருக்க சுய தொழில் செய்யும் மக்கள் தங்களுடைய முதலீட்டை எடுக்க முடியாமல் துன்பப்படுகிறார்கள். மக்களிடம் போதுமான பணம் இல்லாத காரணத்தால் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் சுய தொழில் துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி சுயதொழில் செய்யும் தொழிலாளிகள் இதை நிறுத்திவிடவே முயல்கின்றனர்.
தனியார் துறையில் தொழிலாளியின் பாதிப்பு:
தனியார் துறையைப் பொறுத்தவரை இயல்பாக சம்பளத்தைத் தொழிலாளியின் வாங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள். தொழிலாளிகள் தமக்குத் தேவையான பணத்தை ஏடிஎம்மிலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் பெரும்பாலான ஏடிஎம்களில் பணமில்லாத காரணத்தினால் வாங்கிக்குச் சென்றே பணம் எடுக்கும் நிலையுள்ளது. தன்னுடைய சம்பளத்தை வங்கியிலிருந்து எடுக்க பணிக்கு ஒரு நாள் விடுப்பு எடுத்துச் செல்லும் பரிதாபத்திற்குரியது. தொழிலாளியின் நிலை, " பணத்தை எடுக்க முடியுமா? என்ற கேள்விக்குறி எழுகின்றது.
முதியவர்கள் பாதிப்பு:
முதியவர்களுக்கு வழங்கும் ஓய்வூதியத்தை அவர்கள் பெற முடியாத நிலை உள்ளது. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், அரசுப் பணியிலிருந்து இறந்து போனவர்களின் மனைவிகளுக்கும் வழங்கும் ஓய்வூதியம் வங்கியிலிருந்து தான் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இந்த பண மதிப்பிழப்பு இவர்களையும் விடவில்லை.
இந்த ஓய்வூதியத்தில் வரும் பணத்தை வைத்தே அவர்களுடைய குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை சந்திக்க வேண்டும். ஆனால் இவர்களும் தங்களுடைய முழு ஓய்வூதியத்தைப் பெற முடியவில்லை. ஏனென்றால், வங்கியின் விதிமுறைப்படி நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 5000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. வாரத்திற்கு 24,000 ரூபாய் வரை பெற முடியும்.
இந்த விதிமுறை இவர்களைக் கடுமையாக பாதித்துள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள். அவர்களால் வங்கிக்கு பல முறை வந்து செல்ல இயலாத நிலை உள்ளது. ஆகவே இது முதியவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
கிராமப்புறங்களில் பாதிப்பு:
இந்தியாவைப் பொறுத்தவரையில் 70 சதவீதத்திற்கும் மேல் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றார்கள். இது நாமறிந்த ஒன்றே. ஆனால் பிரதமரின் இந்த முடிசு இவர்களைக் கருத்தில் கொள்ளாதது போல இருக்கிறது.ஏனென்றால் பணப்பொருளாதாரத்திலிருந்து, வாங்கிப் பொருளாதாரத்திற்கு மாறுங்கள் என்று கூறுகிறார்.
ஆனால் இன்றளவும் கூட பல கிராமங்களில் வங்கி இல்லை என்பது அவர் அறிந்த உண்மை. எனவே வங்கியே இல்லாத இடத்தில வங்கிப் பொருளாதாரம் எப்படி பயன்படுத்துவது என்றே தெரியாத நிலை உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் வங்கிப் பொருளாதாரம் என்பது சாத்தியமில்லாத காரியம் மட்டும்மில்லாமல் கிராமத்தில் உள்ள மக்களுக்கு கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டை எப்படி பயன்படுத்துவார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. இந்த நிலையில் இவர்கள் இந்த சேவையை பயன்படுத்துவதில் மிகுந்த சிரமத்துடன் கூடிய சவாலாக உள்ளன.
இது ஒரு புறம் இருக்க கிராமப்புறங்களில் சிறு மற்றும் குறு தொழில்களே நடக்கின்றன. விவசாயம், காய்கறி விற்பனை மற்ற பொருட்களின் விற்பனையே இவர்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. அது வேறு ஒரு தேநீர் கடைக்காரரோ, காய்கறி வியாபாரியோ, பெட்டிக்கடை வியாபாரியோ செய்வது சிறு அல்லது குறு வியாபாரமே. இதில் எல்லாம் பணமில்லாப் பரிவர்த்தனைப் பயன்படுத்துவது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லாத ஒன்று.
ஆகவே இவை அனைத்திற்கும் பணம் அவசியம். ஒரு பால் வியாபாரியிடம் சென்று நான் உங்களுக்கு கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்துகிறான் என்று சொல்ல முடியாது. ஆகவே கிராமப்புறங்களில் வாழும் மக்களின் பொருளாதாரம் பணத்தைச் சார்ந்தது மட்டுமே என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் இந்த அறிவிப்பிற்குப் பிறகு இவர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்து விட்டது. அன்றாட தேவைகளுக்கு பணமில்லாத சூழ்நிலை உருவாகி விட்டது. இதற்கு காரணம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பே. இது கிராம மக்களின் வாழ்க்கையை முடங்கியுள்ளது.
ஆகவே இந்த அறிவிப்பு எல்லாத் தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இது இந்தியா போன்ற வளர்கின்ற நாட்டுக்குச் சரியான கொள்கை அல்ல. இதன் முழு விளைவை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.