தலாய்லாமா, உலகம் முழுவதும் நன்கு அறிமுகமான மதத் தலைவர். அவர் பாரத நாட்டில் நெடுங்காலமாக விருந்தினராக உள்ளார். சீனாவால் விரட்டியடிக்கப்பட்ட அவருக்கு அடைக்கலம் கொடுத்தது பாரதம் தான். அவரை இன்றளவும் மரியாதையுடன் பாரதம் நடத்திவருகிறது. அவரும் இதை நன்கு உணர்ந்துகொண்டுள்ளதால் பாரதத்துக்கு பிரச்சனை ஏற்படக்கூடிய வகையில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
தலாய்லாமா சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது சீனாவின் கண்களை உறுத்தியது.தலாய்லாமா வடகிழக்கு பாரதத்தில் பயணம் மேற்கொண்டபோது அன்பு, அமைதி, அறம், கருணை போன்றவற்றைப் பற்றி மட்டுமே பேசினார். சர்ச்சைக்கிடமான எதையும் அவர் கூறவில்லை.
அருணாச்சலப் பிரதேசம் என்பது தெற்கு திபெத்தாம். இது சீனாவின் ஓர் அங்கமாம். எனவே அருணாச்சலப் பிரதேசம் சீனாவுக்கு சொந்தமாம். இதை இந்தியாவின் நிரப்பரப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதாம். இதை எல்லாம் சீனா இப்போது மீதும் ஒருமுறை கூறியது.
அருணாச்சலபி பிரசதேசத்துக்குள் தலாய்லாமா அடியெடுத்து வைப்பதற்கு முன்பே பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. அசாமில் உள்ள கெளஹாத்தியிலும் திப்ருஹரிலும் பல்கலைக் கழக மாணவர்களிடையே அவர் உரையாற்றினார். பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். கெளஹாத்தி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவின்போது தலாய்லாமா எழுதிய 'எனது தேசம் எனது மக்கள்' என்ற சுய சரிதையின் அசாமி பதிப்பு வெளியிடப்பட்டது. இந்நகழ்ச்சியில் அசாம் ஆளுநர் பன்வாரிலால் ரோஹித், முதல்வர் சர்வானந்த சோனோவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 'நமாமி பிரம்மா புத்திர' விழாவிலும் தலாய்லாமா பங்கேற்றார். திபெத்தில்தான் பிரம்மா புத்திரா உருபத்தியாகிறது. பின்னர் அது இந்தியாவை வளப்படுத்துகிறது.
மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்த்தவர். அவர் தலாய்லாமாவின் ஆன்மீக பயணத்துக்கு அரசியல் நிறம் பூச சீனா முற்படுவதை ஏற்க முடியாத என்று கூறினார். "அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஓர் அங்கம். இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிட சீனாவுக்கு உரிமையில்லை. சீனாவின் உள் விவகாரத்தில் இந்திய தலையிடாது இருப்பதைப்போல இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிடாமல் சீனா இருக்க வேண்டும். வேண்டுமென்றே சீனா விஷமத்தனம் செய்தால் பதிலடி கொடுக்க இந்திய தயங்காது" என்று கிரண் ரிஜிஜூ கூறினார்.
சீனா எல்லை, அருணாச்சலப் பிரதேசத்தை தொடுகிறது என்பது உண்மையல்ல. திபெத்துதான் அங்கே உள்ளது. மக்மோகன் கொடு என்பது இந்தியாவுக்கும் திபெத்துக்குமான எல்லைதான்,இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லை அல்ல என்று அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு சுட்டிக்காட்டியுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் உரையாற்றிய தலாய்லாமா, சீனாவுக்கு எதிராக தன்னை இந்தியா ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்பதை தெளிவுபடுத்தினார். இந்த மண்ணின் மைந்தனாகவே உலகம் முழுவதும் நான் சென்றுவருகிறேன்.கலாச்சார தூதராகவே செயல்பட்டு வருகிறேன் என்று உருக்கமுடன் அவர் குறிப்பிட்டார்.திபெத் மக்களுக்கு சுதந்திரம் வேண்டும், தனி நாடு வேண்டும் என்று கூட அவர் குறிப்பிடவில்லை. சுய ஆட்சி அளிக்கப்பட வேண்டும் என்பதை மட்டுமே அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன் 1983, 1997, 2003, 2009 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலப் பிரதேசத்தில் தலாய்லாமா சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.ஆனால் சீனா கண்டனத்துக்கு பாரதம் வலுவான பதிலடி கொடுத்ததில்லை.
இப்போது மத்தியிலும் அருணாச்சலப் பிரதேசத்திலும் வலுவான பாஜக அரசு உள்ளது. இதனால்தான் சீனாவின் கண்டனத்திற்கு பாரதம் சார்பில் வலுவான எதிர்ப்பு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. சீனாவுக்கு புரியும் மொழியில் கடந்த கால இந்தியத் தலைமை பதிலடி கொடுக்கவில்லை.இப்போது சீனாவுக்கு புரியும் மொழியில் இந்தியத் தலைமை பதிலடி கொடுத்துள்ளது.இதை சீனாவால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.எனவேதான் அது உருமலை உக்கிரப்படுத்தி வருகிறது.