அக்டோபர் 2017 "புதிய ஆசிரியன்" இதழில் பரிசுரிக்கப் பட்டது. 

அந்நாளிலேயே இந்திய சினிமாவைக் கலக்கிய முதல் தமிழ்க் கலைஞன்...

தமிழ் சினிமா கலைஞர்கள் இங்கிருந்து இந்திப் பட உலகத்துக்குப் போவது என்பது பலகால வழக்கம்தான். விரிந்துபரந்த சந்தை காரணமாக பொருளும் புகழும் அள்ளித்தருவதாக துவக்கமுதலே இந்திப் படஉலகம் இருந்துவருவதும் இதற்கொரு காரணம்தான். அங்கு போனவர்களில் மிகச்சிலர் அங்கேயே தங்கிவிடுவதும், பலரும் போன சுவடு தெரியாமல் மீண்டும் இங்கே வந்துவிடுவதும்கூட எப்போதும் வாடிக்கைதான். தமிழின் பிரபலங்களான அந்நாளைய எஸ்.எஸ். வாசன் காலத்திலிருந்து நமது காலத்தின் கமல், ரஜினி வரையில், இயக்குநர்கள் ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா என்று பலரும் இந்தி சினிமாவில் முகம்காட்டத்தவறவில்லை.

ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து, இந்தி சினிமாவில் மிகமுக்கிய உச்சத்தைத் தொட்ட ஒரு முன்னோடிக் கலைஞனை இன்று பலரும் அறியாதிருப்பது ஒரு வியப்பு கலந்த சோகம். இங்கே பிரபலமாகி, அதன் பின்னர் இந்தியில் கால் பதிக்கும் முயற்சியைத்தான் பலரும் இன்றுவரையில் செய்துவருகின்ற நிலையில் அவரோ இந்தி சினிமாவை ஒரு கலக்குக் கலக்கிவிட்டு அப்புறம் சாவகாசமாகத்தான் தமிழுக்கு வந்து தடம்பதித்திருக்கிறார். அவர்தான் இந்திய சினிமாவின் குழந்தைப் பருவத்தில் அதனைச் சீராட்டித் தாலட்டி வளர்க்கிற பெரும்பணியைச் செய்த முதல் தலைமுறை முன்னோடிகளில் ஒருவரான ராஜா சாண்டோ.

ராஜா சாண்டோவின் சொந்த ஊர் தமிழ்நாட்டின் புதுக்கோட்டைதான். அவருக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் பி.கே. நாகலிங்கம். இளம் வயதிலேயே உடற்பயிற்சியில் நாட்டம் கொண்டவராக அவர் இருந்தார். அதனால் கட்டுமஸ்தான அழகிய தோற்றத்தோடு இருந்த அவருக்கு சினிமாவின் மீதும் ஈர்ப்பிருந்தது. அன்றைய பம்பாயில் இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவுக்கு இணையாகப் போற்றப்பட்ட இன்னொரு முன்னோடி எஸ்.என். பதங்கர் நடத்திவந்த நேஷனல் பிலிம் கம்பெனியில் ஒரு சண்டைக் கலைஞராகச் சேர்ந்தார் நாகலிங்கம். அவரது உடற்கட்டையும் தோற்ற வசீகரத்தையும் பார்த்த பம்பாய் சினிமாக்காரர்கள் அவரை ராஜா சாண்டோ என்று அழைக்கத் தொடங்கினார்கள். அன்று ஜெர்மனியின் ஆய்கன் சாண்டோ என்பவர் அவரது உடற்கட்டிற்காக உலகம் முழுதும் பேசப்பட்டார். அவரைப்போலவே இருந்ததால் பி.கே. நாகலிங்கம் பி.கே. ராஜா சாண்டோ ஆனார்.

1922 ஆம் ஆண்டில் பதங்கரின் பக்த போதனா என்ற இந்திப் படத்தில் ராஜா சாண்டோ முதன்முதலாக முக்கிய வேடத்தில் நடித்தார். அதற்காக அவர் பெற்ற சம்பளம் 101 ரூபாய். அதனைத் தொடர்ந்து வீர் பீம்சேன் (1923), தி டெலிபோன் கேர்ல் (1926) போன்ற படங்களில் நடித்துப் பெயர் வாங்கினார். இந்தி சினிமா பேசாதபோதே ராஜா சாண்டோ வடநாட்டு ரசிகர்களால் பேசப்பட்டார். பேசாப் பட யுகத்தில் 36 படங்களில் நடித்து, வடநாட்டார் மனங்களைக் கொள்ளை கொண்ட நடிகராக உயர்ந்த சாண்டோ ரஞ்சித் ஸ்டுடியோஸில் மாத சம்பளத்திற்கு இயக்குநராகச் சேர்ந்தார்.

சிநேஹ் ஜோதி (1928) அவர் இயக்கிய முதல் பேசாப்படம். அதில் அவர் நடிக்கவும் செய்தார். அதனைத் தொடர்ந்து வடக்கே மேலும் 4 படங்களில் நடித்தவர் மெல்ல தனது தாய் மண்ணின் தமிழ் சினிமா உலகை எட்டிப்பார்த்தார். பேயும் பெண்ணும் (1930) அவர் இயக்கி, நடித்த முதல் தமிழ்ப் பேசாப் படம். அதனைத் தொடர்ந்து ராஜலட்சுமி, நந்தனார், ஸ்ரீவள்ளி திருமணம், அனாதைப் பெண், சதி உஷாசுந்தரி, ராஜேஸ்வரி, பக்தவத்சலா போன்ற படங்களில் நடித்தும், இயக்கியும் பங்காற்றினார். 1932ல் சினிமா பேசத்தொடங்கியபோது தமிழில் அவர் பாரிஜாத புஷ்பஹரணம் என்ற படத்தை இயக்கிவிட்டு மீண்டும் தனக்கு சினிமா பயிற்சியளித்த இந்திப் படஉலகம் அவiரை மறக்க இயலாமல் அழைத்தது. அதனை நோக்கிப் பயணப்பட்டார்.

அங்கே சுமார் 12 படங்கள். அவற்றில் ஒன்றின் இயக்குநர். மற்றவற்றில் நடிகர். இப்படி இந்தியில் தான் மேற்கொண்ட இரண்டாவது சுற்றுக்குப் பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்தார். 1935ல் அவர் இயக்கிய மேனகா படம் பலவகைகளிலும் பெருமை பெற்றது. இந்த மேனகாதான் தமிழின் முதல் சமூகப் படம். அந்நாளைய துப்பறியும் கதை எழுத்தாளர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவலைத் தழுவியதுதான் இந்த மேனகா. ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் தயாரித்த இந்தப் படத்தில் தமிழின் பழம்பெரும் நாடக சகோதரர்கள் டி.கே. சங்கரன், டி.கே. பகவதி, டி.கே. சண்முகம், டி.கே. முத்துசாமி ஆகியோருடன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.எஸ்.விஜயாள், கே.டி. ருக்மணி போன்றோர் நடித்தார்கள்.

ஏற்கனவே இந்தப் புதினத்தை டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகமாக நடத்திக்கொண்டிருந்தார்கள்.

இந்த மேனகாவில் ராஜா சாண்டோ பல அதிரடிப் புதுமைகளைப் புகுத்தினார். இந்தி சினிமாவில் பணியாற்றியதாலும், பல ஐரோப்பிய சினிமா கலைஞர்களின் தொடர்பு ஏற்படுத்திய தாக்கத்தாலும் வேறு எந்த தமிழ் சினிமா கலைஞரும் எண்ணிப்பார்த்திடாதவற்றையெல்லாம் ராஜா சாண்டோ தனது படங்களில் துணிச்சலுடன் வைத்தார்.

அப்போதெல்லாம் காதலனும் காதலியும் பேசிக்கொள்வார்களேயன்றி ஒருவரையொருவர் தொட்டுக்கொள்ளக்கூடத் தயங்குவார்கள். காதலிப்பதுகூட போதிய இடைவெளியில் தள்ளி நின்றுதான் நடந்தது. ஆனால் ராஜா சாண்டோ தனது படத்தில் காதலன் காதலியைத் தொடுவது மட்டுமன்றித் தொட்டுத் தூக்கிக்கொண்டுகூடப் போனான். அதைவிடத் துணிச்சலாக கதையின் தேவைக்கேற்ப முத்தக்காட்சியைக்கூட சாண்டோ தன் படங்களில் வைக்க அஞ்சவில்லை. அது அப்போது சர்ச்சையையும் உண்டுபண்ணத் தவறவில்லை.

இந்த முத்தக் காட்சியில் நடித்ததைப் பற்றி டி.கே. சண்முகம் தனது "எனது நாடக வாழ்க்கை" - எனும் நூலில் இப்படி எழுதினார்:

"நானும் ருக்மிணியும் நடிக்கவேண்டிய காதல் காட்சி வந்தபோது ஒத்திகையை நினைத்து என் உள்ளம் வெட்கத்தால் குன்றியது. காதல் கட்டம் என்றால் எப்படி? அன்றுவரை நான் கேள்விப்பட்டிராத முறையில் புதுமுறையாகக் காதல் செய்யும் பேறு எனக்குக் கிட்டியது. நான் ருக்மிணியை ஒரு கையால் அணைத்தபடி அவருடைய வலது கையில் முத்தம் கொடுக்க வேண்டும். எப்படி? சாதாரண முத்தமா? கைவிரல்களிலிருந்து தொடங்கித் தோள்வரையில் முத்தமழை பொழிந்துகொண்டே போக வேண்டும். சரியாக ஒரு டசன் முத்தங்கள். கூச்சத்தால் என் உயிரே போய்விடும் போலிருந்தது. ராஜா இதை நடித்தும் காண்பித்தார்."

இந்த முத்தப் பிரச்சனை பல்வேறு வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பிவிட்டது. அன்றைய பத்திரிகைகளில் ஆதரவும் கண்டனங்களும் சுடச்சுட எழுந்தன. "பொருத்தமான சமயங்களில் சிற்சில சூழ்நிலைகளில் காதலர்கள் முத்தம் கொடுப்பதை நாடகங்களில், திரைப்படங்களில் இயற்கைக்கு ஏற்பக் காட்டுவது தவறல்ல என்று நான் கருதுகிறேன்..." - என்று ஆங்கில ஏடான மதராஸ் மெயில் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் கலைஞர்களுடன் தொடர்புகொண்டிருந்த அன்றைய சட்டப்பேரவைக் காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி.

இயக்குநர் ராஜா சாண்டோ தனது மேனகா படத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னொரு காரியத்தையும் செய்திருந்தார். அதுதான் மகாகவி பாரதியின் பாடலை படத்தில் ஒலிக்கச் செய்த செயல். "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!" என்ற பாரதியின் வைரவரிகள் தமிழ்த் திரைப்படத்தில் முதன்முதலில் ஒலித்தது இந்த மேனகாவில்தான். இது அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டுபண்ணியது.

கலைவாணருக்கும் டி.ஏ. மதுரத்துக்கும் திருமணம் செய்துவைத்த பெருமையுடைய ராஜா சாண்டோ ஒரு இயக்குநருக்கு வேண்டிய முழு ஆளுமைத் தகுதியையும் தன் கையில் வைத்திருந்தவர். அந்நாளைய இந்தி - தமிழ்ப் படவுலக முன்னணிக் கலைஞர்கள் பெரும்பாலோர் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள்.

ராஜா சாண்டோவின் இன்னொரு முக்கிய சாதனையென இந்திய - தமிழ் சினிமா குறித்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், அதுவரையில் படங்களின் துவக்கத்தில் படத்தின் பெயர், தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் பெயர்களை மட்டுமே போடுவது வழக்கமாக இருந்த நிலையில், வடநாட்டுப் பட முதலாளிகளோடு சண்டையிட்டு, படத்தில் நடிக்கிற நடிகர்கள், நடிகைகள் முதல் படத்தில் பங்கேற்றவர்கள் எல்லோரின் பெயர்களையும் காட்டும்படி செய்தவர் அவர்தான்.

அரைத்த மாவையே அரைப்பதுபோல பக்திப் புராண - இதிகாசக் கதைகளையே இந்திய சினிமா கையாண்டுகொண்டிருந்த நிலையை மாற்றி, சமூக உள்ளடக்கங்களைக் கையிலெடுக்க அவரொரு முன்மாதிரியாக, உந்துசக்தியாக இருந்தார். அதற்கு அந்நாளில் மிகப்பெரிய துணிச்சல் தேவைப்பட்டது. அது அவரிடம் நிரம்ப இருந்தது. அவர் பம்பாயில் வசித்தபோது தனது சொந்த முயற்சியால் இந்தி, உருது, பஞ்சாபி போன்ற மொழிகளில் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். இருந்தபோதிலும் அவருள் தானொரு தமிழன் என்கிற பெருமிதம் எப்போதும் இருந்தது.

மேனகாவிற்குப் பின் வசந்த சேனா, சந்திரகாந்தா, மைனர் ராஜாமணி, நந்தகுமார், ஆராய்ச்சிமணி போன்ற தமிழ்ப்படங்களும், சூடாமணி என்ற தெலுங்குப் படமும், மேலும் சில இந்திப் படங்களும் அவர் பெயரைத் திரைப்பட உலகில் தொடர்ந்து நிலைநாட்டியவை. எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பில் "சிவகவி" படத்தை இயக்கத் தொடங்கிய சமயம் அதன் தயாரிப்பாளர் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடுவுடன் அவருக்கேற்பட்ட முரண்பாட்டால் பாதியிலேயே அந்தப் படத்தைக் கைவிட்டு விலகிய ராஜா சாண்டோ அந்தப் படம் வெளிவந்தபின் ஏழு மாதங்கள் சும்மா இருந்தார்.

திடீரென ஒருநாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அது அவரது செயல்பாடுகளை நிரந்தரமாக நிறுத்தி மரணத்தைப் பரிசளித்தது. அவர் இறந்து 74 ஆண்டுகள் ஓடிவிட்டன. 49 வருடங்களே அவர் இந்த உலகில் வாழ்ந்திருந்தார். இந்திய சினிமாவில் அவரது பங்களிப்புகள் வெறும் 20 ஆண்டுகளே என்பதும் சொற்பமான காலம்தான். ஆனாலும், தனக்குக் கிடைத்த அந்தக் குறுகிய காலத்திலும் மிக அழுத்தமாகத் தடம் பதித்தவர் அந்த மகத்தான கலைஞர் ராஜா சாண்டோ என்பதில் என்ன ஐயம் இருந்துவிட இயலும்?