கடந்த மாதம் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பல்வேறு புதுமைகளை, முதன்மைகளை, ஆச்சர்யங்களை படைத்துள்ளது! ஜாதியை முன்னிறுத்திய அரசியல், மதத்தை தாஜா செய்து வாக்கு பெற்று வந்த அரசியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது! குடும்ப ஆட்சி, மகாராணி ஆட்சி மண்ணோடு மண்ணானது! வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்னும் வாக்கு வங்கி அரசியலுக்கு மரண சாசனம் எழுதப்பட்டது!

இதற்கெல்லாம் மேலாக ஒரு அகில இந்திய கட்சி 4 கோடி எண்ணிக்கையிலுள்ள முஸ்லிம்களில் 403 தொகுதிகளில் ஒருவரை கூட வேட்பாளராக நிறுத்தாமல், 90 முஸ்லிம் பெருபான்மை தொகுதிகளில் 66 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது! இத்தனை முதன்மைகளோடு மேலும் ஒன்று யாரும் நினைக்காதது ஆனால் பாஜகவின் அரசியல் எதிரிகளால், தினசரி விமர்சிக்கப்படும் வகையில் ஒரு சன்யாசியை நாட்டின் 5ல் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் முதல்வராக்கியதுதான்!

ஆம்! யோகி ஆதித்ய நாத் 44 வயது இளைஞர். மூன்று சகோதரி, மூன்று சகோதரர்களை கொண்ட ஒரு ஏழைக் குடும்பத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட தாக்கூர் இனத்தில், வனச்சரகர் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர்! கணிதத்தில் பட்டம் பெற்ற பின், கோரக்பூர் சன்யாசி யோகி அவைத்ய நாத்தின் சீடராக 21ம் வயதில் தீக்ஷை பெற்றுக் கொண்டார்! பின்னர் 1996ம் ஆண்டு தேர்தலில் மகந்த் அவைத்யநாத்தின் வெற்றியை உறுதி செய்தார்!

இந்த அனுபவத்தில் பாஜகவில் ஈர்க்கப்பட்டு 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கோரக்பூரில் பாஜக சார்பில் நின்று பெற்ற வெற்றியை மேலும் 5 முறை தொடர்ந்தார் யோகி! இதெல்லாம் சரித்திரம். இவையெல்லாம் இணையதளத்தில் மூலை முடுக்கெல்லாம் சிதறிக் கிடக்கும் உண்மைகள்! வேறு என்ன இவரை பற்றி புதுமையாக உள்ளது? ஒரு சன்யாசியால் நாடாள முடியுமா? அதுவும் ஹிந்து மத வெறிகொண்ட, அடிக்கடி ஹிந்துமத ஆதரவு கருத்துகளை சொல்லி சர்ச்சையில் சிக்கும் ஒருவர் நாடாளலாமா?

முதலில் யோகி ஆதித்யநாத்”தின் காவி உடை, சன்யாசி, ஒரு மடத்தின் தலைமைத் துறவி என்பதை ஒதுக்கி வைத்து விட்டு அவரது செயல்பாட்டை பார்ப்போம்! 1998லிருந்து தொடர்ந்து 5 முறை எம்.பி. இது அசாத்தியமானது! மக்கள் ஆதரவின்றி இது நடக்குமா? 2014 அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாச வெற்றி! இதுவும் மக்கள் பணிக்கு ஒரு சான்று! நாடாளுமன்ற செயல்பாட்டிலும் கடந்த 16 வருடங்களில் அரசின் அத்தனை துறைகளிலும் கமிட்டி உறுப்பினராக இருந்த அனுபவம் – ஒரு சிறந்த ஐஏஎஸ் அதிகாரி பெற்றதை விட சிறப்பான நிர்வாக அனுபவம்.

கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் 403 மதக் கலவரங்கள் நடந்துள்ளது! ஆனால் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் ஒன்றுகூட இல்லை! ஒரே அமைதி! ஒரு ‘ஹிந்து வெறியரின்’ தொகுதியில் ஒரு மதக் கவலரம் இல்லையென்றால்… அவர் மத வெறியராக இருக்க முடியாதல்லவா? ஆதித்ய நாத் இரண்டு விஷயங்களில் மட்டுமே சாதாரண மனிதரிலிருந்து மாறுபட்டவராக இருக்கிறார்! மற்ற அனைத்தும் எல்லோரையும் போலத்தான்!

ஒன்று யோகிகளுக்கான காவி அல்லது மஞ்சள் ஆடை அணிகிறார். நம்மில் பலர் ஐயப்பன் மற்றும் மேல்மருவத்தூர் சீசனில் அணிகிறோம்! இரண்டாவது காலையில் ஒன்று அல்லது 2 மணி நேரம் கட்டாயம் பூஜைகளில் அமர்கிறார்! இப்போது சொல்லுங்கள் யோகி ஆதித்யநாத் நாடாள தகுதியுள்ளவரா? இல்லையா? மதசார்பற்ற போர்வையில் மதக்கலவரம் தூண்டுவோர் மத்தியில், காவி உடையில் சர்வமத சமபாவத்தை தூக்கி நிறுத்தும் யோகி நாடாளுவது பொருத்தம்தானே!

16வது லோக்சபாவில் கடந்த 2லீ ஆண்டில் 77% வருகை பதிவு – 284 கேள்விகள் – 56 விவாதங்களில் பங்கு பெற்றது – 3 பிரைவேட் மெம்பர் பில் கொண்டு வந்தது என்பன பளிச்சிடும் நிர்வாகத்திறமைக்கு சான்றுகள்! பதவியேற்ற மூன்று நாளில், கிரிக்கெட் முதல் ஓவரில் 6 பந்தும் சிக்சர்களாக அடித்த மாதிரி திறமையான செயல்பாடு. ஈவ் டீசிங் ஒழித்து பெண்களுக்கு பாதுகாப்பு. இதை எழுதும் போது உ.பியில் இது மிகப் பெரும் கொடுமை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உ.பி எங்கும் சட்டபூர்வமற்ற, திருட்டு மாட்டிறைச்சிக் கூடங்கள். இவைகள் அனைத்துக்கும் சீல். அரசு அலுவலக சுவர்களில் பான்பராக் எச்சில் பெயிண்ட், எனவே அரசு ஊழியர்கள் வேலை நேரத்தில் பான் மசாலாவுக்கு தடை, லஞ்ச ஒழிப்பு, குடி நீர் பாதுகாப்பு என உடனடியாக முடுக்கிவிடப்பட்ட செயல்பாடுகளை உ.பி. மக்களின் ஏகோபித்த வரவேற்பு!

இதை பொறுக்க பொல்லாங்கு தான் யோகி” நாடாளலாமா? உள்ளத்தில் தான் அவர் யோகி”. செயலில் மற்றவர்கள் அனைவரையும் விட “Speedy” Speedyயும் யோகியும் தானே இன்றைய உ.பியின் தேவை (Needy)?