சில தினங்களுக்கு முன் பாரத பிரதமர் மோடி முஸ்லீம் சகோதரிகளுக்கு தலாக்கிலிருந்து முழு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என கூறினார்.இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அகில இந்திய முஸ்லீம் தனிநபர் வாரியம் என்ற அமைப்பு ,"சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் தனிப்பட்ட சட்டங்களை திருத்த முடியாது முத்தலாக் கூறும் விவாகரத்து பற்றி உச்சநீதிமன்றம் முடிவு செய்ய முடியாது" என வாதிட்டார்.இதுபற்றி சில கேள்விகள் எழுகின்றன.பதில் என்ன என்று பார்த்தால் சில அபத்தங்கள் தென்படும்.
அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் அங்கீகாரம் பெற்ற அமைப்பா?
2016 டிசம்பர் 8 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில்,முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் அரசியல் சாசனப்படி அமைக்கப்பட்ட அமைப்பு கிடையாது என தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பு 1973-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு.அனைத்து முஸ்லிம்களின் பிரச்சனைகளிலும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்காது.குறிப்பாக ஷியா பிரிவு, அகமதிய முஸ்லீம் பிரிவுகளின் விவகாரங்களில் தலையிடாது.சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று. ' மசூதிகளில் வழங்கப்படும் தீர்ப்பு கட்டப் பஞ்சாயத்து'என கடுமையான வார்த்தைகளால் சாடியது. இந்த குற்றச்சாட்டு முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்துக்கும் பொருந்தும்.அலகாபாத் உயர் நீதிமன்றமும்,அரசியல் சாசனத்திற்கு எந்தவொரு தனிநபர் சட்டமும் விஞ்சியது அல்ல (No personal law board was above the constitution) என குறிப்பிட்டுள்ளது.
அரசியல் சாசனம் இந்திய மக்களுக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதா முத்தலாக்?
ஆம்.அரசியல் சாசனம் பகுதி 3ல் ஷரத்து 14 முதல் 18 வரை இது மாதிரி தெளிவாகவே உள்ளது.இதை மீறினால் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.நீதிமன்றம் சொல்லாமலே தலாக் சொல்லி இஸ்லாமிய அமைப்பில் தலாக் பெறலாம் என்றால் என்ன அர்த்தம்?
கிறிஸ்துவ சமூகத்தில் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றாலும்,அந்த தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே விவாகரத்து செல்லுபடியாகும்.இந்த இரண்டிலும் பெண்களுக்கு சம உரிமை உள்ளதா என்பது கேள்விக்குறி.
சில தினங்களுக்கு முன் உத்தரப் பிரதேசத்தில் கொண்ட மாவட்டத்தில் உள்ள கேழ் நீதிமன்றத்தில் வரதட்சனை சம்பந்தமான வழக்கு நடந்துவந்தபோது, நீதிமன்றத்தில் தலாக் என மும்முறை கூறி விவாகரத்து செய்துவிட்டதாக கூறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.ஆகவே முத்தலாக் என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு மாறான கருத்தை ஏற்படுத்துகிறது. "Triple Thalak is unconstitutional it violates the rights of Muslim Women " என்பதும் நீதிமன்றத்தில் நீதிபதுகளால் கொடுக்கப்பட்ட தீர்ப்புதான்.
முத்தலாக் சட்டத்தை திருத்த உச்ச நீதிமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் அதிகாரம் உள்ளதா?
அரசியல் சாசன ஷரத்து 25ல் கொடுக்கப்பட்ட மத சுதந்திரம் என்பது தலாக் சம்பந்தமானது என்பது முஸ்லிம்களின் வாதம்.இந்த வாதம் தவறானது.ஷரத்து 25ல் குறிப்பிட்டுள்ளபடி ஒருவர் தனது மனசாட்சியின் படி எந்த மதத்தையும் பின்பற்ற எந்த தடையும் கிடையாது.தான் பின்பற்றும் மதத்தை பரப்புவதற்கும் அதன் கொள்கைகளை எடுத்துக் கூறுவதற்கும் தடை கிடையாது என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்கள் பாதிக்கப்படும்போது இந்த சட்ட ஷரத்தை காண்பிப்பதா?
1956ல் இந்திய நாடாளுமன்றம் ஹிந்துக்களின் சட்டங்களை திருத்தியது.நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும்,திருமணம்,விவாகரத்து,வாரிசுரிமை போன்ற சட்டங்கள் நிறுத்தப்பட்டன.அப்போது இந்திய அரசியல் சாசன ஷரத்து 25ஐ சுத்திக்காட்டாத தலைவர்கள்,தற்போது சுட்டிக்காட்டிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
உலகில் உள்ள முஸ்லீம் நாடுகளில் முகமது நபி குரானில் குறிப்பிட்டுள்ளபடி முத்தலாக் நடைமுறையில் உள்ளதா?
உறுதியாக கிடையாது. 99 சதவீதம் முஸ்லிம்களை கொண்ட ஈரான், ஈராக்,சவூதி அரேபியா,எகிப்து,ஆப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான்,மலேசியா,இந்தோனேஷியா,துருக்கி போன்ற நாடுகளில் பலமுறை முஸ்லீம் சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் ஒரே நேரத்தில் மும்முறை தலாக் கூறினாலும் விவாகரத்து நடைமுறைக்கு வந்துவிடும்.ஆனால் முஸ்லீம் நாடுகளில் ஒரு முறை கூறியதற்கும் மறுமுறை கூறியதற்கும் இடைவெளி இருக்க வேண்டும்.அந்த இடைவெளியின் கால அளவு கூட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆகவே பலமுறை திருத்தும் செய்யப்பட்டுள்ளது.இந்த தருணத்தில்,பொது சிவில் சட்டம் கொண்டுவர அரசு முயலுவதாகவும் பா.ஜ.க வின் ஹிந்துத்துவ கொள்கையை திணிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் இணைத்து குழப்புவதால்,ஹிந்து சட்டத்தை தன் மீது திணித்து விடுவார்களோ என்ற அச்சத்தை உருவாக்கி வருகிறார்கள்.உண்மையில் பல சந்தர்ப்பங்களில் பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம் வேறு தருணங்களில் வைத்துக் கொள்ளாமல் என கூறிய பின்னரும்,சிறுபான்மையினரின் எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டத்தை முன்னிலைப்படுத்தி,முத்தழகின் கொடுமைகளை மறைக்கும் செயலில் ஈடுபடுகின்றன.