எட்டு ஆண்டுகள் முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பான காலகட்டம். தமிழகத்தில் எங்கு சென்றாலும், எந்த முக்கிய நெடுஞ்சாலை வழியாக பயணித்தாலும் அதிகம் கண்களில் படுவது மூன்று நபர்கள் பற்றிய சுவர் விளம்பரங்களும் ப்ளக்ஸ் பானர்களும் தான். கார்த்தி சிதம்பரம், மு.க. அழகிரி, திருமாவளவன் ஆகிய மூவர் பற்றிய விளம்பரங்கள்தாம் அவை. வேறு வேறு விதமான தேர்தல் தோல்விகள் இவர்களின் ஆட்டத்தை அமுக்கி வைத்தது. இம்மூவரில் மற்ற இருவர் பற்றிய கதைகள் நமக்கு இப்போது தேவையில்லை. மத்திய புலனாய்வுத் துறையின் ரெய்டுக்கு உள்ளாக்கி இருக்கும் கார்த்தி சிதம்பரம், அவரது தந்தை ப. சிதம்பரம் பற்றிய கதையை இப்போது பார்க்கலாம்.

வலுவான நிதி அமைச்சராக ப.சி. பெறுவணிக கம்பனிகளில் முதலாளிகளைத் தவிர யாரையும் பார்ப்பதில்லை. தமிழகத்தில் இருந்து சிறு, குறுந்தொழில் முனைவோர் தில்லியில் அவரை சந்திக்கச் சென்றபோது, பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பிறகு அவர் அனுமதித்த நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. தனக்கு அணிவிக்க வந்த சால்வையை ஏற்றுக்கொள்ள மறுத்த அவர், கண்டிப்பாக அணிவிக்க வேண்டுமென்றால் கார்த்திக்கு அணிவித்து செல்லுங்கள் என்றாராம். ஊழலோடு இணைந்து எப்படி அவர் கார்த்தியை வளர்த்தார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்குவதற்கு என்னென்ன செய்தார் என்பதெல்லாம் தனிக்கதை.

சென்னை நீலாங்கரையில் மீனவ மக்களின் நிலத்தை வளைத்துப் போட்ட கதை, நாமக்கல்லை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் பலகோடி பெறுமான திருப்பூர் ஹோட்டலை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்ட கதை, ஊட்டியில் தொழிற்சாலை ஒன்றையே மூட வைத்து ஆக்கிரமித்த கதை, ராஜபாளையத்தில் ஒரு தொழிற்சாலையை அபகரித்துக் கொண்ட கதை, மும்பையில் 108 ஆம்புலன்சில் கார்த்தி சிதம்பரத்தின் ஊழல், மேற்குவங்க சாரதா சிட்பண்ட் ஊழலில் நளினி சிதம்பரத்தின் ஈடுபாடு என இவர் குடும்பத்தின் மீது ஏகப்பட்ட ஊழல் கதைகள் உண்டு. ஆனால் இவை பற்றி எல்லாம் இன்னமும் முழு உண்மைகள் வெளிவரவில்லை. ப.சி. குடும்ப சொத்து விவரம் என வாட்ஸ் அப்பில் வரும் பட்டியல் நம்மை மிரள வைக்கிறது.

ஏற்கனவே வாசன் ஐ கேர் விஷயத்திலும் அட்வாண்டேஜ் ஸ்டாடிஜிக் கன்சல்டன்சி விஷயத்திலும் இவரின் ஊழலை வெளிப்படுத்திய எஸ். குருமூர்த்தி மீது வழக்கு போடுவேன் என்று இவர் மிரட்டியதும். 'வழக்கை சந்திக்க நான் தயார், இன்னும் ஏன் புளுகுகிறீர்கள் சிதம்பரம்? ' என அவர் சவால் விட்டதும், குருமூர்த்தியின் பதில் சவாலுக்கு பிறகு சிதம்பரமும் அவர் மகனும் கப்சிப் ஆனதும் மற்றொரு கதை.

வழிதவறிய மேல்தட்டு வர்க்க குடுபத்தின் கொலை ஒன்றும் இந்த ரெய்டோடு பின்னப்பட்டுள்ளது. மும்பையில் கணவனைப் பிரிந்த இந்திராணியும் மனைவியைப் பிரிந்த பீட்டரும் திருமணம் செய்துகொள்ள, இந்திராணி முகர்ஜியின் முதல் கணவரின் மகள் ஷீனா போராவும் பீட்டரின் முதல் மனைவியின் மகனும் காதலிக்கத் துவங்கிவிட்டனர். இந்தக் காதலை ஒப்புக்கொள்ள மறுத்த இவர்கள் ஷீனா போராவை கொலை செய்துவிட்டது தற்போது சிறையில் உள்ளனர். இவர்களை இயக்குநர்களாகக் கொண்ட கம்பெனி ஐ.என்.எக்ஸ் மீடியா. இந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெறும் ரூ.4.62 கோடி அந்நிய மூலதனம் திரட்ட எஃப்.ஐ.பி.ஐ எனப்படும் வெளிநாட்டு மேம்பாட்டு முதலீட்டு வாரியத்திடம் அனுமதி பெற்றுவிட்டு, அனுமதியை மீறி ரூ. 305 கோடி நிதி திரட்டப்பட்டது. அனுமதி பெற ஆலோசனை வழங்கிய கார்த்தியின் செஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் 305 கோடி சிக்கலில் இருந்து வெளிவரவும் ஆலோசனையின் பேரில் ஐ.என்.எக்ஸ் நிறுவனம் நடந்து கொண்டு சிக்கலில் இருந்து வெளிவருகிறது. இந்த ஆலோசனையும் அதன்படி நடந்த செயல்களும் ஊழல் நிறைந்தவை. அதுமட்டுமல்ல, சிக்கலில் இருந்து வெளிவந்த ஐ.என்.எக்ஸ் நிறுவனம், அட்வாண்டேஜ் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனிக்கு ரூ. 10 லட்சம் ஆலோசனைக் கட்டணம் வழங்குகிறது. இதுவும் கார்த்தியால் நடத்தப்படும் ஒரு கம்பெனி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கார்த்தியும் சிதம்பரமும் இதை மறுத்தாலும், இது கார்த்தியின் சிதம்பரமும் இதை மறுத்தாலும், இது கார்த்தியின் கம்பெனியே என்பதற்கு ஆதாரங்கள் அள்ளி வீசியிருக்கிறார் குருமூர்த்தி. இந்த அத்தனை ஆதாரங்களும் சிபிஐ வசம் இப்போது உள்ளன. (படிக்க எஸ்.குருமூர்த்தியின் தினமணி மே 20 கட்டுரை)

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், இந்திராணி முகர்ஜி, பீட்டர் ஆகியோரின் வாக்குமூலங்கள், நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் இந்த ரெய்டு என்கிறது சிபிஐ. எனவே கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கார்த்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பின்னரே இந்த ரெய்டை சிபிஐ மேற்கொண்டது.

ஷீனா போரா கொலையின் பின்புலத்தில் பணப்பிரச்சனை ஏதேனும் இருக்கக் கூடும் என்பதாலும் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோரது வீடுகளில் அது தொடர்பான ஆவணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆக, ஊழல் மட்டுமல்ல, கொலையும் கூட இந்த ஊழலில் பின்னிப் பிணைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. காங்கிரஸின் தந்தூரி கொலை, ஷீனா போரா கொலை என காங்கிரீஸின் கொலை, கொள்ளைக் கதைகள் மிகவும் மர்மம் நிறைந்ததாக நீடிக்கிறது. என்னதான் காரணங்கள் சொன்னாலும் இந்த ரெய்டுக்கும் ஏர்செல் மேக்சிஸ் கம்பெனி வழக்கின் பின்னணிக்கும் கூட சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை. சுருங்கச் சொன்னால் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற அத்தனை ஊழல்களிலும் சிதம்பரம் மற்றும் அவர் மனைவி, மகன் என மொத்த குடும்பத்தின் கைவரிசையும் இல்லாமல் இருக்க முடியாது என்றே பொதுமக்கள் கருதுகின்றனர்.

லலித் மோடி லண்டன் சென்றபோதும் விஜய் மல்லையா லண்டன் சென்றபோதும் மோடி அரசை எதிர்த்து கூப்பாடு போட்ட ஊடகங்கள் தற்போது கார்த்தி லண்டன் சென்றுவிட்ட நிலையில் மோடி அரசுக்கு எதிராக கூப்பாடு போடாதிருப்பது சோனியா-சிதம்பரம் கூட்டத்தின் மீது ஊடகங்களுக்கு உள்ள பயம் நீங்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

எஸ்.குருமூர்த்தி, சுப்ரமணிய சுவாமி போன்ற ஊழலுக்கு எதிரான தேசியவாதிகள் இருக்கும் வரை, மோடி என்ற நேர்மையான ஆட்சியாளர் இருக்கும் வரை சிதம்பரம்-கார்த்தி போன்ற ஊழல்வாதிகள் தப்பிச்செல்ல முடியாது என்பது திண்ணம்.