திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். கணவனும் மனைவியும் நூறு சதவீதம் அனுசரித்து செல்வது சாத்தியம் என்று கூற முடியாது. ஆனால் அதே நேரத்தில் அற்ப காரணங்களுக்காக திருமண பந்தத்தை முறிப்பது விரும்பத்தக்கது அல்ல. 

1955ம் ஆண்டு ஹிந்து திருமண சட்டத்தில் திருமண சட்டத்தில் பரஸ்பர விவாக முறிவு கோரும் தம்பதியருக்கு அவர்கள் தொடர்ந்து சேர்ந்து வாழ்க்கை நடத்துவது குறித்து தீர்க்கமாக யோசிக்க 6 மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 6 மாத கால அவகாசம் முடிந்த பிறகும் மணமுறிவு கோருவதில் தம்பதியர் உருதியாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து அளித்து உத்தரவிடும். இந்த 6 மாத காலத்துக்குள் மறுசிந்தனை ஏற்பட்டு, சேர்ந்து வாழலாம் என்ற முடிவுக்கு இருவரும் வரும் பட்சத்தில் பரஸ்பர விவாகரத்து கோரி ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிடும்.

உச்ச நீதிமன்றத்தில் ஒரு தம்பதியர், கடந்த 8 ஆண்டுகளாக நாங்கள் பிரிந்துதான் வாழ்கிறோம். இனிமேல் சேர்ந்து வாழ்க்கை நடத்துவது சாத்தியமல்ல. எனவே, இதை கவனத்தில் கொண்டு பரஸ்பர மண முறிவுக்கான காத்திருப்பு கால அவகாசத்தை 6 மாதத்திலிருந்து குறைக்க வேண்டும் ' என்று மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு செப்டம்பர் 12 அன்று விசாரித்தது. "ஹிந்து திருமண சட்டத்தின் 13 பி (2) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கால அவகாசம் கட்டாயம் இல்லை என்பதே எங்களது கருத்து. இதுகுறித்து மூல வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் உண்மைகள் அடிப்படையில் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். தம்பதியர் மறுபடியும் சேர்ந்து வாழ்க்கை நடத்த சாத்தியம் இல்லை. மறுவாழ்வுக்கு இருவரும் வாய்ப்புகள் உள்ளன என்பது தெரிந்தால், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அவகாசத்தை குறித்துக்கொள்ளலாம்" என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

6 மாத கால அவகாசம் என்பது நிகழ்காலத்தில் மிகவும் நீண்டதாக தோன்றுகிறது. மீண்டும் சேர்வது சாத்தியம் அல்ல என்று உறுதியாக தெரியும்போது அதிக கால அவகாசம் சம்பந்தப்பட்ட இருவருக்கும் உளைச்சலையும் உறுத்தலையும் தான் அளிக்கும். எனவே 6 மாத அவகாசம் என்பதை மூன்று அல்லது இரண்டு வாரங்களாக சந்தர்பத்திற்கு ஏற்ப குறித்துக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள யோசனை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனாலேயே விவாகரத்துகள் அதிகமாகிவிடும் என்று கூறமுடியாது. விவாகரத்து எளிமைப்படுத்துவது ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டாலும் கூட பொதுவாக விவாக வ=பந்தத்தை வலுப்படுத்துவதற்க்கான நடவடிக்கைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

நம் பாரம்பரியத்தில் குடும்பத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது என்பதை உணர்ந்து கொண்டு இதில் நிதானமாக முடிவெடுப்பதே ஏற்புடையது.