ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடை, அதைத் தொடர்ந்து கிளர்ந்து எழுந்த தமிழக இளைஞர்களின் போராட்டம், இன்று ஜல்லிக்கட்டு நடத்தப் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம், என வெற்றிகரமாய் நகரும் இந்த மகத்தான போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் யார்.

ஏன் ஜல்லிக்கட்டிற்கு தடை?

இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு (FIAPO) & PETA இந்தியா (People for the Ethical Treatment of Animals) தொடர்ந்த வழங்கினால் 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு முழுத்தடை விதித்தது. 2016 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு தடையை நீக்கி ஜனவரி 8 , 2016 உத்தரவிட்டது. ஒரு வாரத்துக்குள்ளாய் மத்திய அரசின் ஆணையை செல்லாக்காசாக்கி மீண்டும் தடை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

இவ்வளவு எழுச்சி மிகுந்த போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் யார் ?

1 .கார்த்திகேய சிவசேனாதிபதி

காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தை நிர்வகித்து வரும் இவர்தான் நாட்டு மாடுகளின் மேன்மையை நமக்கு எடுத்துரைத்தவர்.

கலப்பின மாடுகளை விட நாட்டு மாடுகளுக்கு நோய் தோற்று குறைவு

நாட்டு மாட்டின் பாலில் உள்ள அதிக ஊட்டச்சத்து.

சிறந்த இயற்கை உரமாகும் நாட்டு மாட்டின் சாணம், என நமக்கு போதித்தது மட்டும் இல்லாமல் அறிய நாட்டு மாட்டினங்களை பாதுகாத்தும் வருகிறார்.

இன்றும் நம் நாட்டு மாட்டினங்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கைக்கு காரணி, திரு. கார்த்திகேய சிவசேனாதிபதி.

2 .பி.இராஜசேகர்

பி.இராஜசேகர். தலைவர், தமிழ் நாடு ஜல்லிக்கட்டு பேரவை . 2008 ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு எதிராகச் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளாக ஜல்லிக்கட்டிற்காகத் தனது சொத்தை விற்று அரசு மற்றும் PETA போன்ற பெரும் நிறுவனங்களை வழக்கு நடத்தி வருகிறார். இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் இவருக்குப் பின்னால் திறந்திருப்பதில் எந்த வித ஆச்சரியமும் இல்லை.

வாடிவாசல் திறக்க வழி பிறந்திருக்கும் இந்த வேளையில், ஜல்லிக்கட்டுக்கு தலைமைதாங்க இவரை விடத் தகுதி வாய்ந்தோர் தமிழகத்தில் உண்டா? என்ற கேள்வி எழுகிறது.

3 . சீமான்

அரசியல் மேடைகளில் ஒருவரை ஒருவர் மாறி மாறி வசை பாடிக்கொள்ளும் காட்சியையே பார்த்து வந்த தமிழகத்தில், காக்கை, குருவி, காடு, மலை, இயற்கை வள பாதுகாப்பு எனப் பேசி வரும் ஒரே தலைவர், திரு.சீமான். இயற்கைவேளாண்மை, நாட்டு மாட்டின் மேன்மை எனத் தான் பேசிய அணைத்து மேடைகளிலும் பேசி சாமானிய மக்களிடம்கொண்டு சேர்த்திருக்கிறார். தன்னுடைய பொருளாதார கொள்கையாக "மண் சார்ந்த பசுமை பொருளாதாரகொள்கையை" முன் வைத்தவர். நாட்டு மாடு, தப்பட்டம், நாயனம் தவில் இசை ஆகியவற்றைத் தமிழின அடையாளம் என இத்தலைமுறைக்கு எடுத்துரைத்தவர். வருடக்கணக்கில் தமிழகம் எங்கும் விதைத்த விதைகள் தான் இன்றுபோராட்டக் காலத்தில் பூக்களாய் பூத்திருக்கின்றன.

4 . "ஹிப் ஹாப் தமிழா" ஆதி

இசை அமைப்பாளர் ஆதி, தொடக்ககாலம் முதல் தனது இசையால் தமிழ் உணர்வை ஊட்டிவந்தவர். சென்ற ஆண்டு வரை ஜல்லிக்கட்டிற்காக மதுரை மண்ணைத் தாண்டி மக்கள் போராட்டம் பெரிய அளவில் நடந்ததாகச் செய்தியில். ஆனால் இன்று மரீனா கடற்கரையில் லட்சக்கணக்கில் இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட காரணம் இவரின் "டக்கரு டக்கரு" பாடல் . அதுவரை பலருக்கு தெரியாத ஐயா திரு.கார்த்திகேய சிவசேனாதிபதியை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர். இன்று பல ஊர்களுக்குச் சென்று இளைஞர்களை அறவாழியில் போராட வழிநடாத்திவரும் ஹிப் ஹாப் தமிழாவுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

இன்னும் முகம் தெரியாத, அடையாளம் காணப்படாத பல்லாயிரக் கணக்கான போராளிகளின் வேர்வையும், உழைப்பும் இந்தப் போராட்டத்தை வெற்றிபெறச்செய்யும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் பல தலைவர்கள் , காட்சிகள் உருவாயின, ஆனால் இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் உணர்வுள்ள ஒரு தலைமுறையே உருவாகியுள்ளது. அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் கூறுவேன் "தமிழா தமிழா நாளை நம் நாளே ."