அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்வதற்கான புதிய விதிகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, ஏரி, குளம், கோவில் மற்றும் விவசாய நிலங்களில் வீட்டு மனைகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
விவசாய நிலங்கள் சட்ட விரோதமாகவும், முறையான அங்கீகாரம் இல்லாமலும் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தது. மேலும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்து புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்றும், விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற விதிகளை உருவாக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்து புதிய விதிகளையும், புதிதாக வீட்டு மனைகளை உருவாக்குவது தொடர்பான விதிகளையும் தமிழக அரசு உருவாக்கி உள்ளது.
இந்த புதிய விதிகளுக்கு கடந்த 2-ந் தேதி தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்பின்னர், தமிழக கவர்னரும் இந்த புதிய விதிகளுக்கு ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து, புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவந்து, தமிழக வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறை செயலாளர் தர்மேந்திரா பிரதாப் யாதவ் 2 அரசாணைகளை வெளியிட்டு உள்ளார். அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்வது தொடர்பான அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் அடிப்படை வசதிகள் இல்லாமல், அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் ஏராளமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலங்களை ஏழைகளும், அப்பாவிகளும்தான் அதிகம் வாங்கி இருக்கிறார்கள்.
எனவே, இவர்களுக்கு பாதிப்பு வராமல் இருக்கவும், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ள இந்த நிலங்கள் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியாத நிலையில் இருப்பதாலும், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம் - 1971-ன் கீழ், அனைத்து அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளையும் வரையறை செய்ய புதிய விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இதன்படி, தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் கீழ், ‘தமிழ்நாடு அங்கீகாரமற்ற லேஅவுட் மற்றும் பிளாட்டுகள் (வீட்டு மனைகள்) விதிகள் -2017’ என்ற புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளையும், அந்த வீட்டு மனைகளுக்கு அருகேயுள்ள விற்பனை செய்யப்படாத மனைகளையும் மட்டுமே வரையறை செய்ய முடியும்.
இந்த நிலங்களை வரையறை செய்ய, இந்த அரசாணை வெளியான நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.
இந்த நிலங்களை வரையறை செய்யும் அதிகாரிகளாக, மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அதிகாரி, (கிராம பஞ்சாயத்துகளில் உள்ள நிலங்களுக்கு) வட்டார வளர்ச்சி அதிகாரி, சென்னை மாநகரத்தை பொறுத்தவரை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
உள்ளூர் திட்டக்குழுமம், மண்டல திட்டக்குழுமம், புதிய நகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்டவைகளின் அதிகாரத்துக்கு உட்பட்ட அங்கீகாரம் இல்லாத நிலங்களை வரையறை செய்ய, அந்த குழுமத்தின் துணை இயக்குனர், உதவி இயக்குனர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
குளம், குட்டை, ஏரி, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலம், பொது பயன்பாட்டு நிலம் (ஓ.எஸ்.ஆர்), பூங்கா, விளையாட்டு மைதானம், சுற்றியுள்ள வீட்டு மனைகளுக்கு செல்லும் பாதையை மறித்து அமைந்துள்ள நிலம், பொது சாலைகள், ரெயில் பாதைகள் உள்ள நிலம், நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் உள்ள நிலங்கள், உயர்மின் அழுத்த கோபுரம் மற்றும் கம்பிகள் ஆகியவற்றின் கீழ் உள்ள நிலங்கள் உள்ளிட்டவைகளை வரையறை செய்யக்கூடாது.
இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளின் உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் ஆகியோர் தங்களது நிலங்களை வரையறை செய்ய ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ரியல் எஸ்டேட் அதிபர்கள் அமைத்துள்ள அங்கீகாரமற்ற வீட்டுமனைகளில், ஒரு பகுதி மட்டும் விற்பனை செய்து, மீதமுள்ள வீட்டு மனைகளை வரையறை செய்யும்போது, அங்கு ஓ.எஸ்.ஆர். நிலம் இருப்பதை உறுதி செய்யவேண்டும். ஒருவேளை ஓ.எஸ்.ஆர். நிலம் அமைக்க வாய்ப்பு இல்லை என்றால், அந்த வழிக்காட்டு மதிப்பு தொகையில், 10 சதவீதத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
விவசாய நிலங்களுக்கு மத்தியில் வீட்டு மனைகள் அமைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டு மனைகளால் விவசாய நிலங்களுக்கும், அதற்குரிய கால்வாய்களுக்கும் பாதிப்பு உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். பாதிப்பு இருந்தால், அந்த நிலங்களை வரையறை செய்யக்கூடாது.
மாநகராட்சி பகுதி என்றால், 4.8 மீட்டர் அகலம் கொண்ட சாலையும், பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து என்றால், 3.6 மீட்டர் அகலம் கொண்ட சாலையும் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
நிலங்களை வரையறை செய்ய மாநகராட்சி பகுதிகளில், ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100, நகராட்சி பகுதிகளில் ரூ.60, பேரூராட்சி, கிராமபஞ்சாயத்து என்றால் ரூ.30 என்ற வீதத்தில் கட்டணம் வசூலிக்கவேண்டும்.
இதுதவிர, வரையறை செய்யப்படும் நிலங்களை மேம்படுத்துவதற்கான கட்டணத்தையும் சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு ரூ.600 மாநகராட்சி பகுதிகளிலும், ரூ.350 சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சி பகுதிகளிலும், ரூ.250 முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சி பகுதிகளிலும், ரூ.150 பேரூராட்சி பகுதிகளிலும், ரூ.100 கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும் மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்க வேண்டும்.
இந்த நிலத்தை வரையறை செய்ய மேற்கொள்ளும் ஆய்வு பணிக்கு தனியாக ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். நிலத்தை வரையறை செய்த பின்னர், அதற்குரிய கட்டணத்தை செலுத்தும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்படும்.
அந்த உத்தரவின்படி, 30 நாட்களுக்குள் அந்த தொகையை செலுத்தவேண்டும். செலுத்தாவிட்டால், ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் அந்த தொகை 90 நாட்களுக்குள் வசூலிக்கப்படும். அப்படியும் தொகையை செலுத்தவில்லை என்றால், அந்த நிலத்தை வரையறை செய்யக்கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
இந்த புதிய விதிகளின்படி அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரையறை செய்யவில்லை என்றால், அந்த மனைக்கு மின்சாரம், குடிநீர், கழிவுநீர் வெளியேற்றல் இணைப்புகள் வழங்கப்படாது. பத்திரப்பதிவும் இனி செய்ய முடியாது. அந்த நிலத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்கப்படாது.
தற்போதுள்ள புதிய விதிகளின்படி, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் மட்டும் தான் வரையறை செய்யப்படும். அந்த நிலத்தில் கட்டிடங்கள் ஏதாவது விதிமுறை மீறி கட்டப்பட்டு இருந்தால், அந்த கட்டிட விதிமீறல்களையும் வரையறை செய்ததாக அர்த்தம் இல்லை.
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.
எதிர்காலத்தில் வீட்டு மனைகளை உருவாக்குவது தொடர்பான புதிய விதிகள், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அதுகுறித்து பிறப்பிக்கப்பட்ட மற்றொரு அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இனி வரும் காலங்களில் புதிய வீட்டு மனைகளை அமைக்கும்போது, நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனரின் ஒப்புதலை மட்டுமே பெறவேண்டும். இந்த ஒப்புதலை பெறுவதற்கு முன்பு, விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலம் என்று குறிப்பிட்டு, மாவட்ட கலெக்டர் மற்றும் விவசாயத்துறை இணை இயக்குனரிடம் உரிய அனுமதியினை பெறவேண்டும்.
அப்போது, அனுமதி வழங்கப்படும் நிலம் ஆறு, ஏரி, குளம், கால்வாய் போன்ற நீர்நிலைகளில் இல்லை என்பதையும், அரசு புறம்போக்கு நிலம், வழிப்பாட்டு தலங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலம் இல்லை என்பதையும் மாவட்ட கலெக்டர் உறுதி செய்து, சான்றிதழ் அளிக்க வேண்டும். உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லும் பாதைக்கு கீழ் உள்ள நிலம், விவசாயத்துக்கு தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய தகுதியான நிலம் ஆகியவற்றை வீட்டு மனைகளாக மாற்ற கலெக்டரும், விவசாயத்துறை இணை இயக்குனரும் ஒப்புதல் அளிக்கக்கூடாது.
இதற்காக நகர் மற்றும் ஊரமைப்பு துணை இயக்குனருடன், மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். அதன்பின்னரே வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கவேண்டும். கலெக்டர், விவசாயத்துறை இணை இயக்குனர் ஆகியோரது அனுமதி ஆவணங்களை ஆய்வு செய்யும்போது நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனர் சந்தேகம் எழுந்தால், அவர் நேரடியாகவோ அல்லது அந்த அதிகாரிகள் மூலமாகவோ மீண்டும் ஆய்வுகளை செய்யவேண்டும். வீட்டு மனைகளை அமைக்க இயக்குனர் ஒப்புதல் அளித்த பின்னர், உள்ளாட்சி அமைப்புகள் அந்த நிலத்தின் சந்தை மதிப்பில் 3 சதவீதத்தை கட்டணமாக வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஐகோர்ட்டில் தாக்கல்
இந்த 2 அரசாணைகளும் சென்னை ஐகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
இதுதொடர்பான வழக்கு வருகிற 12-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த அரசாணைகளை நீதிபதிகள் ஆய்வு செய்த பின்னரே, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
Courtesy : Dailythanthi News paper