செப்டம்பர் 2017 "புதிய ஆசிரியன்" இதழில் பரிசுரிக்கப் பட்டது 

காலத்தை மீறி நிற்கும் கலைப்படைப்பு... 

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் - நாட்டியப்பேரெளி பத்மினி நடித்து, ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் 1968ல் வெளிவந்த ஈஸ்ட்மென் கலர் தமிழ்ப்படம் தில்லானா மோகனாம்பாள். பல அம்சங்களிலும் நம்மைப் புருவமுயர்த்தவைக்கிறது இந்தத் தில்லானா மோகனாம்பாள் இன்றைக்கும். எழுதப்பட்ட ஒரு நாவலைத் திரைக்கதையாக்கும் கலையை இன்றளவும் வெற்றிகரமாக முயன்று பார்க்காத தமிழ் சினிமாதான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னமேயே கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் நாவலைப் படமாக்கும் முயற்சியில் பெருவெற்றி பெற்றது. இதனை இயக்கிய ஏ.பி. நாகராஜனுக்குத்தான் இந்தப் பெருமை சேரும். அவர் அதற்கும் வெகு காலத்திற்கு முன்னரே, அதாவது எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, 1960 ல் அகிலனின் நாவலான பாவை விளக்கு கதையைப் படமாக்கிச் சாதனை செய்தவர். தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு அதனை இயக்கிய ஏ.பி. நாகராஜன்தான் திரைக்கதை எழுதினார். தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும்கூட அவரேதான்.

கொத்தமங்கலம் சுப்புவின் இந்தக் கதை முதலில் ஆனந்தவிகடனில் (1957 -58) தொடர்கதையாக வந்தது. அப்போது கொத்தமங்கலம் சுப்பு கலைமணி என்ற புனைபெயரிலேயே இதனை எழுதிவந்தார். தானே இதை ஒரு திரைப்படமாக எடுக்க எண்ணியிருந்தார் விகடன் ஆசிரியரும் அந்நாளில் புகழ்பெற்றிருந்த ஜெமினி ஸ்டூடியோ, ஜெமினி பிக்சர்ஸ் அதிபருமான எஸ்.எஸ். வாசன். அதன் காரணமாக இயக்குநர் ஏ.பி.நாகராஜன் இதைத் திரைப்படமாகத் தயாரிக்க நினைத்தபோது வாசன் அதனை விரும்பவில்லை. அப்போது இந்தக் கதையின் உரிமை வாசனிடமிருந்தது. பிறிதொரு சமயம் நாகராஜன் தன்னை அணுகியபோது மறுக்காமல் அதன் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார் வாசன்.

அப்போது ஏ.பி. நாகராஜன் அந்தக் கதையின் உரிமைக்காக 25 ஆயிரம் ரூபாயை வாசனிடம் கொடுத்தார். பின்னர் கொத்தமங்கலம் சுப்புவைச் சந்தித்து அவருக்கு கூடுதலாக 10 ஆயிரம் ரூபாயைத் தந்தார். அப்போது, அதனை வாங்கமறுத்து, ஏற்கெனவே நாகராஜன் தந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தை தனக்கே தந்துவிட்டார் வாசன் என்ற வியப்புச் செய்தியையும் சொன்னார் சுப்பு. எப்படியெல்லாம் நேர்மையோடும், நெகிழ்வுடனும் இருந்திருக்கிறது அன்றைய கலையுலகம் என்று வியக்கத்தான் வேண்டும்.

தில்லானா மோகனாம்பாள் படத்தின் ஒருவரிக் கதை இதுதான். சண்முகசுந்தரம் ஒரு நாதஸ்வர மேதை. நாடறிந்த கலைஞர். அவரது நாதஸ்வர இசைக்கு மயங்காதார் இல்லை எனுமளவுக்குப் பிரபலம். அதேபோல, மோகனா மிகப்பெரிய நாட்டியக் கலைஞர். அவரது பரதக்கலையை ரசிக்காதார் இல்லை. இந்த இருவரின் சந்திப்பு, மோதல் அதனைத் தொடர்ந்து ஏற்படும் காதல் என்று துவங்கி, கலைஞர்களான அவர்களுக்கு சமுதாயத்தின் பெரிய மனிதர்களால் ஏற்படும் இடர்ப்பாடுகளிலிருந்தும், தங்களுக்குள் உண்டாகும் முரண்களிலிருந்தும் விடுபட்டு அவர்கள் எப்படி ஒன்றுசேர்கிறார்கள் என்பதே கதை.

நாதஸ்வரக் கலைஞன் சண்முகசுந்தரமாக சிவாஜி கணேசன் இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கிறார். அவருக்குப் பக்கபலமாக இரு தவில்கலைஞர்களாக டி.எஸ். பாலையாவும், சாரங்கபாணியும். தன்னோடு இணை நாதஸ்வரக் கலைஞராக ஏ.வி.எம். ராஜன். அதேபோல, நாட்டியக் கலைஞர் மோகனாவாக சிவாஜிக்கு ஈடுகொடுக்கும் நடிப்பில் மிளிர்ந்தவர் நாட்டியப் பேரொளி பத்மினி. அவரின் நட்டுவாங்கனாராக கே.ஏ. தங்கவேலு. மிருதங்க வித்வானாக டி.ஆர். ராமச்சந்திரன். மோகனாவின் தாயார் வடிவாம்பாளாக சி.கே. சரஸ்வதி. அவரின் உதவியாள் வெத்தலைப் பெட்டியாக எம். சரோஜா. பசையுள்ள பணக்காரர்களிடம் ஒட்டிக்கொண்டு மோகனாவுக்கும் சண்முகசுந்தரத்துக்கும் கெடுதல்கள் செய்யும் மிகவும் சவால்கள் நிறைந்த பாத்திரமான சவடால் வைத்தியாக நாகேஷ். நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான தெருக்கூத்துக் கலைஞராக ஆச்சி மனோரமா. இவர்களோடு சகஸ்ரநாமம், நம்பியார், பாலாஜி, நாகையா, எம். பானுமதி, இ.ஆர். சகாதேவன் என்று இன்னும் கொஞ்சம் கலைஞர்கள்.

கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்தப் படத்தின் உயிர்நாடியான நாதஸ்வர இசையை வழங்கியவர்கள் எம்.பி.என். சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி சகோதரர்கள். படத்தில் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜி ஒருநாள் தன் தலையைக் கவியரசு கண்ணதாசனின் மடியில் வைத்துப் படுத்திருக்க, சேதுராமன், பொன்னுசாமி நாதஸ்வர ஜோடி அவர்கள் முன்னிலையில்வாசித்துக்காட்டி

னார்கள். அதுவும் மூன்று மணிநேரம். அந்த இசையை நன்கு கேட்டு ரசித்த சிவாஜியும், ஏ.பி. நாகராஜனும், கண்ணதாசனும் அவர்கள்மீது சபாஷ் மழையைப் பொழிந்தனர். ஏ.பி.என். தன் படத்திற்கு நாதஸ்வரப் பின்னணி இசையை வழங்கும் கலைஞர்களை இவ்வாறுதான் தேர்வு செய்தார். அந்தத் தேர்வு எம்.பி.என். சகோதரர்களுக்கும் உலகப் புகழைப் பெற்றுத்தந்தது.

ஏ.பி. நாகராஜன் தன்னுடைய ஸ்ரீவிஜயலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தத் தில்லானா மோகனாம்பாளைத் தயாரித்தார். கே.எஸ்.பிரசாத்தின் காமிரா அன்றைய ஈஸ்ட்மென் கலரில் கண்ணை உறுத்தாமல் வர்ணஜாலம் காட்டியது. படத்தொகுப்புப் பணியை எம்.என். ராஜனும், டி.ஆர். நடராஜனும் இணைந்து மேற்கொண்டார்கள். கலை இயக்குநர் கங்காவின் கைவண்ணத்தில் கதையின் பின்னணித் தளங்கள் உருவாக்கப்பட்டன. தான் ஏற்ற நாதஸ்வர வித்வான் பாத்திரத்திற்காக சிவாஜி கர்நாடக இசைக் கச்சேரிகளைத் தொடர்ந்து கவனித்துவந்தார். நாதஸ்வரக் கலைஞர்களின் கச்சேரிகளுக்குச் சென்றார். இசை அறிஞர்களோடு உரையாடினார். தனது பாத்திரத்தின் தன்மையை மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்டு அதனைத் திரையில் வெளிப்படுத்தத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டார். அதேபோலத்தான் தவில் கலைஞர்ளாக நடித்த டி.எஸ்.பாலையாவும், சாரங்கபாணியும், மிருதங்கக் கலைஞராக நடித்த டி.ஆர். ராமச்சந்திரனும் அதற்காகக் கடும் பயிற்சி எடுத்துக்கொண்டார்கள்.

நாட்டியக் கலைஞர் மோகனா பாத்திரத்தில் முதலில் ஒரு இளம் நடிகை பரிந்துரைக்கப்பட்டார். படத்தின் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அதனை மறுத்துவிட்டார். சிவாஜி கணேசனுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு சிறப்பாக வெளிப்படுபவராகவும், நாட்டியத்தில் தேர்ந்தவராகவும் அவர் பத்மினி ஒருவரையே மனதில் வைத்திருந்தார். அவரிடத்தில் வேறு ஒரு நடிகையைக் கற்பனைகூடச் செய்யமுடியவில்லை. ஆனால், பத்மினி ஏற்கெனவே சினிமாவுக்கு முழுக்குப்போட்டுவிட்டு அந்த சமயம் தனது கணவர் ராமச்சந்திரனுடன் அமெரிக்காவில் குடியேறிவிட்டிருந்தார். ஏ.பி. நாகராஜன் பத்மினியின் கணவருடன் தொடர்புகொண்டு இந்தப் படத்தின் முக்கியத்துவத்தை அவருக்கு உணர்த்தினார். கணவரின் அனுமதியோடுதான் பத்மினி மோகனாம்பாள் அவதாரமெடுத்தார்.

மோகனாவின் அழகில் மொத்தம் மூன்று பெரிய மனிதர்கள் மனதைப் பறிகொடுக்கிறார்கள். பணத்தாலும், அதிகாரத்தாலும் அழகிற்சிறந்த அந்த நாட்டியத் தாரகையை அடைந்துவிடத் துடிக்கிறார்கள். இதற்கு மோகனாவின் தாயாரே துணைபோவதுதான் அந்நாளைய கலைஞர்களின் வாழ்வியல் சோகம். தேவதாசிமுறை கொடூரத்தின் யதார்த்தச் சூழல் அதுதானே? கதையோட்டத்தில் அதனைத் துறுத்தாமல் சொல்லியிருப்பது வியப்புக்குரியது. மோகனா நாதஸ்வர மேதை சண்முகசுந்தரத்தின்மீது கொண்டிருக்கும் தீராத காதலாலும், உள்ள உறுதியாலும் அவர்கள் மனந்திருந்தி, அந்தக் கலைக்காதல் இணையருக்கு உதவுமளவு மாறுகிறார்கள். படத்தில் மேலும் சில சிறப்பம்சங்களைக் கூறியே ஆகவேண்டும். அவற்றில் முதன்மையானது நடிகர்திலகத்தின் வெகு இயல்பான நடிப்பு. சிவாஜியை எப்போதும் மிகை நடிப்புக்காரர் என்றே குற்றம் சுமத்திக்கொண்டிருந்த அந்தச் சூழலிலேயே நாதஸ்வரம் வாசிப்பதுபோல அல்லாமல் நடிப்பில் மிகவும் அடக்கி வாசித்திருப்பார். பத்மினி எப்போதும்போல நாட்டியத்தில் மிளிர்ந்திருப்பார். ஆனால், அவரைக்காட்டிலும் ஆச்சி மனோரமா தனது தெருக்கூத்து நடனம் மூலமும், அன்பே நிரம்பிய அப்பாவிப் பெண் கலைஞர் பாத்திரத்தின் வாயிலாகவும் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்டார்.

இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்ட ஒரு பாத்திரப் படைப்புதான் நாகேஷ் ஏற்றிருந்த சவடால் வைத்தி எனும் எதிர்மறைப் பாத்திரம். நாகேஷின் நடிப்பால் இந்தப் பாத்திரம் தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட ஒன்றாக ஆகிப்போனது. தனது முழு ஈடுபாடு மிக்க நடிப்பால் சிவாஜியே வியந்து பாராட்டுமளவு ஒரு அற்புதக் கலைஞனாக நாகேஷ் இந்தப் படத்தில் தனது பங்களிப்பை வழங்கினார். தமிழ் சினிமா இதுநாள்வரை உருவாக்கியிருக்கும் அமரத்துவக் கதாபாத்திரங்களை வரிசைப்படுத்தினால் அதில் நாகேஷ் ஏற்றிட்ட இந்த சவடால் வைத்திக்கு மிகமுக்கிய இடம் நிச்சயம் இருக்கும்.

இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக உச்ச நடிகரான சிவாஜி நடித்திருந்தும் இந்த தில்லானா மோகனாம்பாளில் ஒரு டூயட் பாடல்கூட இடம்பெறவில்லை. ஆண் பின்னணிப் பாடகரின் குரல் அரவேயில்லை. படத்தில் மூன்றே மூன்று பாடல்கள். மூன்றுமே பெண் குரலில் அமைந்த பாடல்கள். பி. சுசீலாவின் குரலில் பிரபலமாயின இரு பாடல்கள். மற்றொன்று மனோரமாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நாட்டுப்புறப் பாடல். படத்தின் அடையாளங்களாகவே மாறிப்போன நலந்தானா பாடலும், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாடலும் அத்தனை எளிதில் மறக்கக்கூடியவையா என்ன? படம் வெளிவந்து 49 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. பலவகைகளிலும் நம் மனங்களையெல்லாம் கொள்ளைகொண்டுவிட்ட இந்த மோகனாம்பாளை அதன் பொன்விழா காலத்திலும் சிறப்பாக நினைவுகூர்வோம்!