காங்கேயம் இனகால்நடைகள் பற்றி அலசி ஆராய்ந்து அது தொடர்பான நிறைய ஆவணங்களையும் விலாவாரியாகத் தெரிந்து கொண்டு எழுத நினைத்து, பல்வேறு நெருங்கிய நண்பர்களிடமும் இது பற்றிப் பேசினோம். தாரமங்கலத்தைச் சார்ந்த எனது நண்பர் திரு.இளங்கோ, விவசாயநூல் என்ற நூலும், விவசாய மூலம் என்ற நூலினையும் வழங்கிப் படிக்கச் சொன்னார். 

விவசாய நூல் 25.08.1956 லும் விவசாய மூலம் 15.11.1959 லும் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு நூலின் ஆசிரியரும் திரு.வி.டி.சுப்பையா முதலியார் அவர்கள் (Agronomist and Professor of Agriculture, Agricultural College Coimbatore))விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து நுμக்கங்களையும் அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார். விவசாய நூல் 1960களில் 6ஆம் பாரத்திற்கும், விவசாய மூலம் நூல் 9,10வது வகுப்பு படிக்கும் மாணாக்கருக்கும் பாடநூலாக அமைந்திருக்கிறது.

அதில் மாட்டினுடைய வகைகளையும் அலசி ஆராயப்பட்டுள்ளது. அதே போல 1958-ல் கால்நடை பராமரிப்புத்துறையின் இயக்குனராக இருந்த டாக்டர் டி.பட்டாபிராமன் எழுதிய The Kangeyam Breed of Cattle என்றும் புத்தகத்தையும் 2008-ல் வெளியான எஸ்.பன்னீர்செல்வம் மற்றும் என்.கந்தசாமி (Dept of Genetics and

Breeding, Veterinary College and Research Institute Namakkal) எழுதிய (The Kangayam Cattle, A

Retrospective and Prospective Study) என்னும் புத்தகமும் வழங்கி படிக்கச் சொன்னார்.

ஈரோடு, திருப்பூர், கோவை மூன்றையும் உள்ளடக்கி அன்றைய கோவை மாவட்டம் அமைந்திருந்தது. பழைய கோட்டையில் பட்டக்காரர் என்பவர் அவரது பண்ணையில் 1500 முதல் 2000 மாடுகள் வைத்திருந்ததாகச் சொல்கிறார். ஒரு வருடத்தில் அதிலிருந்து 300 முதல் 350 பொலிகாளைகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் சொல்லி இருக்கின்றார். பால் மாடுகள் சினைப்பட வேண்டியவை, கன்றுகள், கிடாரிகள், காளைகள் ஆகியவை தனித்தனியாக புல் காடுகளில் விடப்பட்டு புல் மேய்ச்சலிலேயே வளர்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்கள் மழை பொய்த்துப் போய் புல் இல்லாதுபோன காலத்தில் தட்டையும் வைக்கோலும் கொடுத்து பாதுகாத்து வளர்த்து வந்ததனையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தின் ICAR (Indian Council of Agricultural Research) ஆதரவு பெற்ற ஒரு திட்டத்தின் கீழ் பட்டக்காரரின் பசுக்கள் கொடுக்கும் பாலைத் தனித்தனியாக அளந்து குறித்து வந்திருக்கின்றனர்.

அதிலிருந்து அவருடைய மாட்டு மந்தையில் ஒரு சில மாடுகள் அதிக அளவு பால் கொடுக்கின்றன என்பதனைத் தெரிந்து கொண்டு, அந்த மாதிரியான பசுக்களை அடிப்படையாகக் கொண்டு நாளடைவில் சிறந்த பால் கறக்கும் இனங்களை உருவாக்கலாம் என்கிற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அன்றைய காங்கேய மாடுகளின் ஜாதிக் குணங்களையும் விலாவாரியாக விவரித்துள்ளதை. வாசகர்களின் பார்வைக்குப் படைக்கிறேன். தட்டையான தலையும், மட்டமான நெற்றியும், இருண்ட தோற்றமுடைய கண்களையும், குட்டையான காதுகளையும், கொம்புகளைப் பொறுத்தவரை விரிந்து பின்னோக்கிச் செல்லும் இயல்புடையது என்றும் விளக்கியுள்ளார்.

கழுத்தினைப் பொறுத்த வரை கட்டையாகக் கனத்து தசை மிகுந்ததாகவும் திமில் புடைத்து சுமாரான வளர்ச்சி கொண்டதாகவும் கழுத்திற்கு அடியில் தொங்கும் Dewlap மெல்லியதாகவும் மார்பு வரை நீண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். உடலைப் பொறுத்தவரை கட்டையாகவும் அகலமாகவும் மட்டமானதாகவும் பின்னங்கால்களைப் பொறுத்தவரை அழகாக நன்றாக அமைந்து வலிமையுடையதாகவும் சிறிது சரிந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Sheath ஐப் பொறுத்த வரை உடலோடு ஒட்டியே இருப்பதாகவும் வால் நன்கு நீண்டு சன்னமாக இருக்கும் என்றும், கால்களைப் பொ றுத்த வரை கனத்த எலும்புகளோடு கட்டையாய் இருக்கும். குளம்பினைப் பொறுத்தவரை சிறியதாகவும் கெட்டியாகவும் நன்றாக காணப்படுகிறது. பொலிகாளைகளைப் பொறுத்த வரை மயில் நிறமுடையதாகவும் தலை, திமில், கழுத்து தொடை பாகங்கள் நன்கு கருத்து இருண்டிருக்கும். பசுக்களும் எருதுகளும் வெள்ளையாயிருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

காங்கேயம் இனத்தினைப் பொறுத்த வரை 5 பிரிவுகள் தற்போதுள்ளது. மயிலை, பிள்ளை, காரி, செவலை மற்றும் குர்ரா என்பது அந்த 5 பிரிவுகள். அந்த 5 பிரிவுகள் கொண்ட பசுக்களை வெள்ளகோவில் புரவிமுத்து என்பவர் தற்போது வளர்த்து வருவதுடன் அதிலிருந்து பஞ்சகாவ்யம், சோப்பு, ஊதுபத்தி, கம்யூட்டர் சாம்பிராணி இன்னும் பல பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றார்.

தற்போதுள்ள காங்கேயம் இனத்தினை பழைய கோட்டை 33வது பட்டக்காரர் மற்றும் அவரது மகன் ராவ்பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் உருவாக்கியதாகச் சொல்கிறார். அப்போதிருந்த காங்கேயம் மாடுகளை மேக்காட்டு மாடுகள் என்றே அழைத்தார்கள். கொங்கர், அதாவது கொங்கர் மாடு நாளடைவில் கொங்கு மாடு என்றும் அழைக்கப்பட்டது.

கொங்கு மாடு போன்ற உருவம் பொதித்த சேரர் கால நாணங்கள் கரூர் அமராவதி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டதாக சங்க கால கொங்கு நாணயங்கள் என்றும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இது கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திராவின் ஓங்கோல் இனத்தையும் கர்நாடகாவின் ஹல்லிகார் இனத்தையும் அப்போதிருந்த காங்கேயம் மாட்டினையும் இணைத்து தற்போதுள்ள காங்கேயம் பசுக்களை திரு.ராவ்பகதூர் நல்லதம்பி சர்க்கரை மண்டாடியார் உருவாக்கினார்.

காங்கேயம் மாடுகள் காளைகள் மற்றும் எருதுகள் நல்ல திடகாத்திரமும் விவசாய வேலைகளை சுறுசுறுப்புடனும் செய்கிற காரணத்தால் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு வாங்கிச் சென்று வேலை பழக்கி உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அது மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் குறிப்பாக பிரேசில், மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்றவைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரேசிலில் உள்ள தற்போதைய காங்கேயம் காளைகளின் எடை ஒரு டன்னுக்கும் அதிகமானதாக இருக்கிறது.

கொரங்காட்டில் மானாவரி நிலங்களில் வன்னிமரங்கள் மற்றும் வெள்ளைவேலா மரங்கள் நிறைந்துள்ளன. மழைக்காலங்களில் கொழுக்கட்டை புற்கள் நன்கு செழித்து வளரும். மேய்ச்சல் காடுகளில் இவைகளே முக்கியத் தீவனங்களாக இருந்தது. இந்த இனத்தினைப் பொறுத்த வரை வேலைத்திறன் மிகுந்தது. இரண்டு டன் எடையுள்ள கரும்பு வண்டியை சுலபமாக இழுத்துச் செல்லும் திறன் படைத்தவை. அந்தக் காலத்தில் கவலை பூட்டி நீர் இறைத்தல், நிலத்தை உழுது பண்படுத்தல் போன்ற விவசாயப் பணிகளுக்கு காங்கேயம் பசு எருதுகள் மட்டுமே பயன்பட்டது. வறண்ட பனை ஓலைகளைக் கூட தின்று ஜீரணித்துக் கொள்ளும் அசாத்தியத் திறன் படைத்தது. குறைந்த பராமரிப்பிலேயே நன்கு செழித்து வளரும் இனம் இந்தக் காங்கேயம் இனம்.

கன்றுகள் பிறக்கும் பொழுது சிகப்பு நிறமாகவும் 5,6 மாத வளர்ச்சிக்குப் பின் தனது இயல்பு நிறமான வெள்ளைக்கு மாறும். காளைகளைப் பொறுத்தவரை சாம்பல் கலந்த வெண்மை நிறமாகவும், திமில் பகுதி, முகம், காலின் முன் மற்றும் பின் பகுதிகள் அடர்ந்த கருப்பு வண்ணத்திலிருக்கும் காளைகள் ஆண்மை நீக்கம் செய்த பிறகு தான் இயல்பான வெண்மை நிறத்திற்கு மாறும். கொம்புகள் நன்கு செழித்து மேல்நோக்கி அழகாக வளர்ந்திருக்கும். கொம்பும், முன்வாயும், கண் இமைகள், வால்முடி, கால் குளம்புகள் கருப்பு நிறத்திலிருக்கும், பசுக்களும் காளைகளும் எருதுகளும் கட்டுமஸ்தான உடம்பினைக் கொண்டிருக்கும். பசுக்களுக்கு மடி சற்று பருத்து தொங்கிய வண்ணமிருக்கும். பாலின் அளவு குறைந்திருந்தாலும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும்.

கிடாரிகள் இரண்டரை வயதிற்குப் பின்பே பருவத்திற்கு வரும். பால் சுரப்புக் காலம் சற்றே ஏறத்தாழ ஒன்பது மாதங்கள். கன்று போட்ட இரண்டு மாதத்திலேயே மீண்டும் பருவத்திற்கு வரும் ஒரு வருடத்திற்கு ஒரு கன்று என்று போடும் பல பசுக்கள் உண்டு. பால் தினசரி 3 முதல் 4 லிட்டர் வரை மட்டுமே இருக்கும். நன்கு தீவனம் கொடுத்து பராமரித்தால் 5, 6 லிட்டர் தினசரி கறக்கும்.

சில பசுக்கள் பாலினை அடக்கி வைத்து கன்றுகளுக்கு மட்டுமே பால் கொடுக்கும். நாம் கறந்தால் பால் சுரக்காது. சராசரி கொழுப்பு சக்தி 4 விழுக்காடு எஸ்.என்.எண்ப் 6.9 விழுக்காடு. நாட்டு மாட்டினங்களைப் பொருத்தவரை அந்த ஊர்ப்பெயரே அந்த இனத்திற்கு பெயராகிறது. பூர்வீகம் காங்கேயம் பகுதி என்பதால் அந்தப் பெயரே அந்த இனத்திற்கும் பொருந்துகிறது. ஆனாலும் தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி, பல்லடம், கொடுவாய், ஈரோடு, கரூர் அரவக்குறிச்சி, திண்டுக்கல் பகுதிகளிலும் இந்த காங்கேயம் இனம் அதிக அளவு பரவியிருக்கிறது.

சிந்து சமவெளி நாகரீகத்தில் மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட காளைச் சின்னம் காங்கேயம் காளைகளை ஒத்திருப்பதால் அந்தக் காலத்திலிருந்தே இந்த காங்கேயம் இனம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. பழைய கோட்டை பட்டக்காரர் அந்தக் காலத்தில் ஏறக்குறைய 15000 ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளராக இருந்திருக்கிறார். சுமார் 5000 ஏக்கர் நிலத்தில் மாடுகள் மேய்ந்து வருவதற்கு ஒதுக்கியுள்ளார். சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் தீவனப்பயிர் விளைவித்து பசுக்களைப் பராமரித்து வந்துள்ளார்.

கொளுக்கட்டைப்புல், ஒட்டம்புல், குருட்டுப்புல், சோளப்புல், கோரைப்புல், மூங்கில்புல், சீசாம்புல், வெண்ணாம்புல் வகைகளும் நரிப்பயிறு, சவரிக்கொடி, செப்பு நெருஞ்சி, கொள்ளு, காட்டுக்கொள்ளு, பூனபுடுக்குக் கொடி தட்டப்பயிறு போன்ற பயிறு வகைச் செடிகளும், அரப்பு மரம், வெள்ளைவேலாமரம் வன்னிமரம் போன்ற மரங்களும் வளர்த்து அதன் இலைகள் தீவனமாகப் போடப்படுகிறது.

காங்கேயம் பசுவிலிருந்து பால் எடுத்து தயிராக்கி வெண்ணெயெடுத்து நெய்யாக்குகிறார்கள். இவை சுகந்த மணம் கொண்டதாக இருக்கிறது. எவ்வளவு நெய் விட்டுச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காது. நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகும். கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். சாணம் சிறுநீர் பால், தயிர், நெல் சேர்த்து பஞ்ச கவ்யா தயாரித்து செடி கொடிகளுக்கும் அடிக்கின்றனர். மனித உடலுக்குத் தேவையான பஞ்சகாவ்யமும் தயாரிக்கின்றனர்.

1924 ஆம் ஆண்டு முதலே ஓசூர் மாவட்டக் கால்நடைப் பண்ணையில் காங்கேயம் காளைகளை உற்பத்தி செய்ய காங்கேயம் பசுக்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் காங்கேயம் காளைகளை வழங்கி இயற்கை முறையில் இனச்சேர்க்கை செய்து அதன் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின்பு தமிழகத்தில் ஈரோடு, பெருந்துறை, பங்களாப்புதூர், திருப்பூர், கோவை இன்னும் பல்வேறு ஊர்களில் காளைகள் வளர்க்கப்பட்டு தினசரி விந்து எடுக்கப்பட்டு அதில் பல்வேறு மருந்துகள் சேர்த்து திரவ விந்தினை பனிக்கட்டிகளில் பாதுகாத்து கால்நடை மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு செயற்கை முறை கருவூட்டல் செய்து அதன் இனவிருத்தி பெருக்கப்பட்டது. தற்போது தரமான காளைகளிலிருந்து விந்து சேகரித்து ஊறைவிந்தாக்கி தமிழகம் முழுவதுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை மருத்துவக் கிளை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு காங்கேயம் பசு உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது நாட்டினப் பசுக்கள் மேல் விழிப்புணர்வு அதிகமாகி வருகிறது. வீட்டிற்கொரு நாட்டுப்பசு என்கிற நிலை உருவாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு பெருமை மிக்க இந்த காங்கேயம் இனத்தைக் கௌரவிக்க மத்திய அரசு 20.04.2000ல் ரூ. 3 மதிப்புள்ள ஸ்டாம்பு வெளியிட்டுள்ளது என்பது இதன் சிறப்பைக் குறிக்கிறது. இதே போல் ஹல்லிஹார், கான்க்ரெஜ், மற்றும் கிர் காளைகளுக்கும் ஸ்டாம்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கேயம் பசுக்கள் காளைகள் கிடைக்கும் இடங்களும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்பிற்கு :

டாக்டர் கே.வி.கோவிந்தராஜ் PhD

கால்நடை ஆராய்ச்சியாளர்

அலைபேசி : 98427 04504, 94425 41504

காங்கேயம் இனப்பசுக்கள் கிடைக்கும் இடங்கள்

1. துணை இயக்குநர், மாவட்டக் கால்நடைப் பண்ணை ஓசூர் 635 110. கிருஷ்ணகிரி மாவட்டம். அலைபேசி 94450 32532, தொலைபேசி 04344 262632 262633 2624320

2. திரு.எஸ்.சுப்பிரமணி, முத்தூர் முருகன் காங்கேயம் மாட்டுப் பண்ணை ஈரோடு. அலைபேசி 98423 80003, 98423 80005

3. திரு. கார்த்திகேயன், பொன் அருக்காணி கோசாலை பெத்தாம்பாளையம் ஈரோடு. அலைபேசி 70101 63144, 99427 81838

4. மாட்டுத் தாவணி, பழைய கோட்டை ஈரோடு அருகில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை.

5. அந்தியூர் குருநாதசுவாமி கோவில் கால்நடைத் தேர்த்திருவிழா ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம்.

6. கால்நடைத் தேர்த்திருவிழா வெள்ளகோவில் அருகே கண்ணபுரம் சித்ரா பௌர்ணமி சமயம்.

7. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை பிரதி ஞாயிறுதோறும்

8. ஈரோடு தம்பிக்கலை அய்யன் கோவில் திருவிழா மாட்டு சந்தை பங்குனி மாதம்