நாற்பத்தோரு நாட்கள் தமிழக விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு நடத்திய போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியின் ஐந்தர் மந்தரில் நாடாளுமன்றத்திற்கு சில நூறு மீட்டர்கள் தொலைவில் தான் அவர் கள் சாலைகளில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
வித்தியாசமான போராட்டங்கள்:
சாலையிலேயே உறங்கினார்கள், காலையில் எழுந்தார்கள், தினம் ஒரு போராட்ட வடிவை மேற்கொண்டார்கள். டெல்லி இளைஞர்களை ஈர்த்தார்கள். இந்த விவசாயிகளின் குரல் நியாயத்திற்கான குரல், தமிழகத்தில் இருந்து நமக்காக டெல்லி வந்து ஒலிக்கும் குரல் என பிற மாநில விவசாயிகள் அவர்களுடன் சேர்ந்து போராட டெல்லி நோக்கி வந்தார்கள்.
அப்படி வந்த மாநில விவசாயிகள் மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், ஆந்திரா, மணிப்பூர், கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இப்படி எல்லோரும் தேடி வருவதைப் பார்த்த பிறகுதான் தமிழக விவசாயிகள் எழுப்பும் குரலின் வலுவை தமிழகத்தின் பல அரசியல் கட்சிகளுடைய தலைவர்களும் புரிந்து கொண்டார்கள். டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தான் அவரைச் சந்தித்த முதல் அரசியல் தலைவர் என்பதையும் மறுக்க முடியாது.
அதன் பின்னர் தான் மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்கள் பிற அரசியல் தலைவர்கள் எல்லாம் ஐந்தர் மந்தரை தேடிப் போனார்கள். அவர்களுடன் சில மணிநேரங்கள் அமர்ந்து கொண்டார்கள். போட்டோ எடுத்தார்கள், பிறகு திரும்பினார்கள். தேசியக்கட்சி என எடுத்துக் கொண்டால் விவசாயிகளை தேடிப் போய் சந்தித்தவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரான ரா-குல் காந்திதான். டெல்லியில் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்த எத்தனை எத்தனை கவன ஈர்ப்புப் போராட்ட முறைகளை தினம் ஒன்றாக நடத்தினார்கள்.
தமிழகச் செய்திகளை பெரிதாக கண்டுகொள்ளாத டெல்லியின் அனைத்து ஊடகங்களிலும், முக்கிய அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும் தொடர்ந்து செய்திகள் வெளி வந்தது என்றால். அது இது மட்டுமே!
பிரதமரை எட்டாத பிரச்சனைகள்:
ஆனால் தமிழக விவசாயிகள் யாருடைய காதில் தன்னுடைய குரல் விமுந்து, அதனால் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நியாயம் கிடைக்கும் என்று எண்ணினார்களோ. அந்த மனிதர் அவர்களை திரும்பிப் பார்க்கவில்லை. வேறு எங்காவது கூட அவர்களை பற்றிப் பேசவில்லை. பேசத் தெரியாத மனிதரல்ல அவர். மேடைகளில் பிரமாதப்படுத்துவார். நாடாளுமன்றத்தில் கூட அபூர்வமாகத்தான் பேசுவார்.
மதிப்புக்குரிய மாண்புமிகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடி ஆதரவாக சில வார்த்தைகளை தமிழக விவசாயிகள் போரட்டத்தின் தொடக்க நாட்களிலேயே தெரிவித்திருந்தால் கூட போராட்ட வடிவமோ, வேகமோ கூட கொஞ்சம் தணிந்திருக்கலாம். தமிழக விவசாயிகளைத் தேடி வந்து பார்த்தவர்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கேபினட் அமைச்சர் அல்லாத தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதகிருஷ்ணன் மட்டுமே. அவர்கள் விவசாயிகளைச் கேட்டுக் கொண்டதெல்லாம் இது தான். போராட்டத்தை கைவிட்டு தமிழகம் போங்கள். பிரதமர் நிறைவேற்றுவார் என்கிற கிளிப்பிள்ளை பேச்சுகளையே அவர்கள் பேசினார்கள்.
மைப்புள்ளியும், போராட்டமும்:
போராட்டத்தின் அடிப்படையை மத்திய அரசு புரிந்து கொண்டதா என்பது தெரியவில்லை என்பது போலவே அவர்களின் பதில்கள் அமைந்திருந்தது. தமிழகத்தில் தாங்கள் முன் வைத்த கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ள அல்ல பரிசீலிக்கப்படவே இல்லை. நடத்திய போராட்டங்கள் அனைத்தும் கண்டு கொள்ளப்படவே என்ற நிலையில்தானே அவர்கள் டெல்லி நோக்கி புறப்பட்டார்கள். தேசிய உணர்வுள்ள ஒவ்வொரு இந்தியனும் மேற்கொள்ளுகிற முயற்சிதானே இது! நம்பிக்கையின் கடைசி தளம் என்பது வலுவுள்ள மையம்தானே! தமிழக விவசாயிகள் முன் வைத்த கோரிக்கை என்ன தீர்வு காணப்பட முடியாததா?
கோரிக்கைகள்:
பருவமழை கைவிட்டதால் தமிழகம் முழுவதும் பொய்த்துப்போனது. இதற்காக தமிழகம் முழுமைக்கும் ஏக்கருக்கு குறைந்தது 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன் வைத்தார்கள். ஆனால் மாநில அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணமாக ஐந்தாயிரத்தைக் கொடுத்தது. இது போதாதென்றும், மத்திய அரசு வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு 25 ஆயிரம் வழங்க வேண்டும்.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் விவசாயிகளுள்கு ஓய்வூதியம் அமைக்க வேண்டும். விளை பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்பது தான் விவசாயிகள் கோரிக்கை.
ஒட்டுமொத்தமாகவே தமிழக விவசரியகளின் கோரிக்கையை மத்திய அரசு மறுத்தால் எப்படி? செய்ய முடிந்தவற்றை உடனே செய்கிறோம் மற்றவற்றை பரிசீலித்து படிப்படியாகச் செய்ய முயல்கிறோம் என்று சொல்ல என்ன தயக்கம்?
இந்தப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவராகவும் உள்ள அய்யாக் கண்ணு இதைப் பற்றி முன் வைக்கும் கேள்வி இது. ‘பல தனியார் கம்பெனிகளுக்கு பல இலட்சம் கோடிகளை மத்திய அரசு மானியமாக கொடுக்கிறது. ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் மொத்த கடன் ஏழாயிரம் கோடி. அதனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. நாங்கள் 40 ஆயிரம் கோடி வறட்சி நிவாரணமா க க் கேட்ட இடத்தில் வெறும் 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு தருவது எந்த விதத்தில் நியாயமானது?
அவர் முன்வைக்கும் கேள்விகளில் உள்ள நியாயம் நடுநிலையாளர்களுக்கு மட்டுமே சரியாகப் புரியும். ஏன் டெல்லியில் அய்யாக் கண்ணுவிடம் வட இந்திய பத்திரிகையாளர் ஒருவர் முன் வைத்த கேள்வி இது. ‘உங்கள் பிரச்சினைகளுக்கு தமிழகத்தில் இருந்து கொண்டு போராடாமல் டெல்லிக்கு ஏன் வந்தீர்கள்?’ அதற்கு அய்யாக்கண்ணு சொன்னார்.
‘ஊருல விவசாயம் பொய்த்ததால விவசாயிகள் செத்துப்போனா மாநில அரசு குடும்பப் பிரச்சினையில் செத்துப்போனான்னு சொல்லுது. அதனாலத்தான் டெல்லிக்கு வந்தோம். எங்களுக்கு நீதி கிடைக்கலேன்னா இங்கேயே செத்துப்போறோம். அப்போவாவது தெரியுமில்லையா நாங்க எதனால செத்துப்போறோமுன்னு. பத்து விவசாயிகள் இங்கே செத்துப் போனாலாவது விவசாயிகள் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கட்டுமே! தயாராத்தான் புறப்பட்டு வந்திருக்கிறோம். தீர்வு கிடைச்சா ஊருக்கு. இல்லேன்னா இங்கேயே சாவு என்று ஒரு முடிவுடன் பேசி இருக்கிறார்.
யார் ஏமாற்றினார்கள்:
இந்தப் போராட்டம் இந்தியா முழுவதும் எதிரொலிகளை உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் பல ஊடகங்களில் இந்தப் போராட்டம் முக்கிய செய்தியும் ஆனது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி, போராட்டக் குழுவினரிடம் பிரதமரை சந்திக்க அழைத்துச் செல்கிறோம் என்று கூறி பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர் டெல்லி போலீசார். ஆனால் அங்கு சென்ற பின்னர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை ஏற்றுக் கொண்டு திரும்பிப் போகச் சொன்னார்கள்.
இதனால் மனமுடைந்த தமிழக விவசாயிகள் நிர்வாணமாக பிரதமர் அலுவலக வீதிகளில் விழுந்து புரண்டு போராட்டம் செய்தனர். அழைப்பில் நேர்ந்துவிட்ட தவறு என மத்திய அரசு சமாளிக்க முயற்சித்தது. ஒரு மாத போராட்டத்தின் விளைவு, தமிழக விவசாயிகளை அம்மணமாக்கிய அரசாங்கங்களின் கொடூர அலட்சியம்.
பிரதமர் அலுவலக வீதிகளில் நிர்வாணமாக ஓடிய தமிழக விவசாயிகளின் கூக்குரல் காட்சிகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக விவசாயிகளை சந்திக்காமல் பிரதமர் தவிர்த்தது அவர்களை நிர்வாணமாகப் போராட வைத்திருப்பது நாட்டின் தேசிய அவமானம் என்று கொதிக்கிறார்கள் தமிழ் உணர்வாளர்களும், நியாய நே £க்காளர்களும் மீண்டும் வலியுறுத்தி சொல்கிறோம். ‘இந்த நிர்வாணம் இந்தியாவின் அவமானம்’.
போராட்ட வடிவங்கள்:
இந்த நாற்பத்தோரு நாட்களும் அவர்கள் டெல்லியின் தினம் ஒன்றாக நடத்திய போராட்ட வடிவங்கள் அவர்களின் மனக்குமுறலை எப்படியெல்லாம் காட்சிப்படுத்தின!
ஊருக்கே சோறு போட்ட விவசாயி டெல்லியின் வீதிகளில் பிச்சையெடுத்தான். பாதி மொட்டை போட்டான், முழு மொட்டை போட்டான், எலிக்கறி, பாம்பு கறி தின்றான், இறந்த விவசாயிகளின் மண்டையோட்டு மாலையுடன் கண்ணீர் வடித்தால், சிறுநீர் குடித்தான், புடவை கட்டிக் கொண்டான். இறந்துபோன விவசாயிகளின் குடும்ப நிலையை உணர்த்த தாலியறுத்து மாரடித்துக் கொண்டான் மோடி முகமூடி அணிந்த ஒருவர் சாட்டையால் அடிக்க அதையும் வாங்கிக் கொண்டான், நாற்பத்தோரு நாட்கள் டெல்லியில் தமிழக விவசாயி நாயை விடக் கேவலமாகக் கிடந்து போராடினான்.
புறக்கணித்தார்கள்! பிரதமரை சந்திக்கலாம் என்று ஏமாற்றினார்கள். மானம் போன நிலையில்தான் அவர்கள் நிர்வாணமானார்கள். இதைவிட வேறு எப்படி தங்கள் குமுறலை அவர்கள் எழுச்சியோடு வெளிப்படுத்த முடியும்?
கொச்சைப்படுத்திய தமிழக பி.ஜே.பி:
தங்களின் வாழ்வாதாரத்துக்காக கண்ணீருடனும் வேதனையுடன் குமுறலை வெளிப்படுத்திப் போராடிய இந்த விவசாயிகளை பாரதீய ஜனதாவின் அமைச்சர்கள் உட்பட தமிழகத் தலைவர்கள் கொச்சைப்படுத்திய விதம் இருக்கிறதே அது தான் எல்லாவற்றிலும் கொடுமை.
டெல்லியின் வீதிகளில் நாள் ஒன்றாக சித்தரித்து நடத்தப்பட்ட போராட்டங்களில், மொழி தெரியாத மக்கள் கூட கண்கலங்கினார்கள். ஆனால் தமிழ்மொழி தெரிந்த இந்த தேசிய விவசாயிகள் பேசிய பேச்சுகள் இவை:
‘இவர்களின் போராட்டத்திற்கு உள்நோக்கம் இருக்கிறது. பின்னிருந்து யாரோ தீய சக்திகள் இவர்களை இயக்குகிறார்கள்’ - இது தமிழக பாரதீய ஜனதாவின் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்.
ஆனால் பாரதீய ஜனதாவின் எச்.ராஜா சொன்ன கருத்து இருக்கிறதே! ‘அய்யாக்கண்ணு’ ஆடி கார் வைத்திருக்கிறார் - ஏன்? விவசாயி ஆடிக் கார் வைத்து வாழ்வது தேச விரோதமா? எங்கும் கோவணத்துடன் தான் திரிய வேண்டுமா? இவர்கள் கட்சிப் பணத்திலும், ஆட்சிப் பணத்திலும் பல வித கார்களில் பறக்கலாம்! விவசாயி சொந்தக்காசில் கார் வாங்கக் கூடாதா? ஆனால் நான் ‘ஆடி’ கார் வைத்திருப்பதை ராஜா நிரூபித்தால் டெல்லியில் தற்கொலை செய்து கொண்டு சாகிறேன் என்றார் அய்யாக்கண்ணு.
மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொடங்கிய விவசாயிகளின் டெல்லிப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வராமல், முடக்கத் தீர்மானித்த முயற்சிகள்’ இந்தியா ஒரு சுதந்திர நாடுதானா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி உள்ளனர். அதற்கான பதில் கவிஞர் ஆத்மாநாபின் இக்கவிதை.
‘எனது சுதந்திரம் தனி நபராலோ அரசாங்கத்தாலோ பறிக்கப்படும் எனில் அது எனது சுதந்திரம் அல்ல. அவர்களின் சுந்திரம் தான்’.